மாணவர் மற்றும் ஆசிரியர் இதயங்கள் கவர்ந்துள்ளனவா ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்கள்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/03/2024

மாணவர் மற்றும் ஆசிரியர் இதயங்கள் கவர்ந்துள்ளனவா ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்கள்?

 திராவிட மாடல் அரசின் முன்னோடித் திட்டங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்ட வல்ல திட்டங்களாகக் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மைக் குழு, எண்ணும் எழுத்தும் திட்டம், குட்டிக் காவலர் திட்டம் முதலானவை இருக்கின்றன. 


இவற்றுள் முத்தாய்ப்பாக பாடநூல் அறிவுடன் நூலக அறிவும் ஒவ்வொரு மாணவருக்கும் இன்றியமையாத தேவை என்பதை உணர்ந்து செயல்படும் வகைமைப் போற்றத்தக்கது.


படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில் மொழிகளில் 4 & 5 வகுப்புகளில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், 6, 7, 8 & 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேன்சிட்டு இதழும் மாதமிருமுறையும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாதஇதழ் வெளியிடப்படும் என்றும் சுமார் ரூ. 7 கோடி மதிப்பிட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்களில் தேசிய, மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும் எனவும், அதுபோல் ஆசிரியர்களின் படைப்பாற்றலைப் போற்றிப் பாராட்டவும், அங்கீகரிக்கவும்,‌ ஆவணப்படுத்தவும், கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும் எனவும் அரசாணையின்வழிக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேற்குறிப்பிட்ட இதழ்கள் அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளுக்கும் தலா ஒரு பிரதி விதம் ஆண்டு விடுமுறை, பருவ விடுமுறை நீங்கலாக மாதமிருமுறை என ஒரு கல்வியாண்டிற்கு (ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு) தலா 20 இதழ்களையும் ஆசிரியர்களுக்கான மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க ஏதுவாக ஒரு கல்வியாண்டிற்கு 10 இதழ்கள் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வழங்கி வருகிறது. இவற்றின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளராக பள்ளிக்கல்வித் துறையின் இணை இயக்குநர் நிலையில் ஒருவர் செயல்பட்டு வருவதும் அறியத்தக்கது.


இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகியவை மாதமிருமுறை வெளிவரத்தக்க A3 அளவிலான வண்ண வண்ணப் படங்கள் நிறைந்த 24 பக்கங்கள் கொண்ட நல்ல தரமான தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, கனவு ஆசிரியர் எனும் ஆசிரியர்களுக்கான மாத இதழ் உயர் தொழில்நுட்பத்துடன் வழவழப்பான தாளில் 52 பக்கங்கள் கொண்ட கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய புத்தகமாக உருவாக்கப்பட்டுத் தரப்படுகிறது. 


இவையனைத்தும் முறையாக பதிப்புரிமை மற்றும் காப்புரிமை பெறப்பட்டு இந்திய அஞ்சல் துறை அனுப்புகை அனுமதி பெற்று இயங்கி வருவது எண்ணத்தக்கது. 


மாதந்தோறும் உரிய காலத்திற்குள் இந்த மூன்று இதழ்களும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் இலவசமாக அனுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஏனைய பள்ளிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் குறைந்த அளவிலான தனி இதழாகவும் ஆண்டு சந்தா செலுத்தி அஞ்சல் வழியிலும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. 


மாணவர்களுக்கான இதழ்களான ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பிடித்தமான, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், எளிய நடையில், மனத்தைக் கவரும் வண்ணப் படங்களுடன், அறிவியல் சிந்தனையைத் தூண்டும் கருத்துகள், சிறார் பாடல்கள், கதைகள், துணுக்குகள், பொது அறிவுத் தகவல்கள், புதிர்கள், முக்கிய நாள்கள், புகழ்பெற்ற மனிதர்கள் குறித்த செய்திகள், வாழ்க்கைக்குதவும் செயல்பாடுகள், குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் போன்றவை அவரவர் வயதுக்கு ஏற்ப இதழ்களில் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன. 


மேலும், மாணவர்களின் ஆக்கங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவை கனிவுடன் பரிசீலனை செய்யப்படுவதுடன் அவர்களின் அழகிய நிழற்படங்களுடன் அவரவர் பள்ளி அல்லது வீட்டு முகவரிக்குத் தனியாகக் கூடுதல் இதழ் ஒன்று அனுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 


அதேபோல், மாணவர்களுக்கான இவ்விரு இதழ்களையும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் வழியாக சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர்கள் உரிய மாணவர்களிடம் வழங்க ஏதுவாக, நாள்தோறும் வாசிப்பு நேரமாக மதியம் 1 மணி முதல் 20 நிமிடங்கள் வரை கல்வித் துறையால் கால அட்டவணை வழங்கி இருப்பதும் சிறப்பு. 


தவிர, ஒவ்வொரு இதழும் முதல் பக்க அட்டைப்படத்துடன் கூடிய வாசிப்பைத் தூண்டும் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் வினாவில் தொடங்கி இதழ் பிடித்திருக்கிறதா? என்ற கேள்வியுடன் முடிவது பாராட்டிற்குரியதாக உள்ளது. மாணவர்கள் இந்த இதழ்களைத் தனியாக வாங்கிப் படிக்கவும் பாதுகாக்கவும் பிறருக்குப் பரிசளிக்கவும் பெற்றோர்கள் துணையுடன் சந்தாதாரர்கள் ஆகவும் வழிவகை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 


தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் பன்னெடுங்காலம் பள்ளிக்கல்வித் துறை மீது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். ஏற்கனவே நடைமுறையில் புத்தகப் பூங்கொத்துத் திட்டம் மற்றும் வாசிப்பு மூலை என்று வகுப்பறையில் வாசிப்பை நேசிப்போம் என்று நூலக அறிவை வளர்க்கும் நோக்கும் போக்கும் தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மாணவர்கள் சார்ந்த ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு இதழ்கள் அனைத்துத் தரப்பு மாணவர்களையும் வாரித் தழுவிக் கொண்டு உயிர்ப்புடன் விளங்குவதை மறுப்பதற்கில்லை. உண்மையான வகுப்பறை கள நிலவரமும் அஃதேயாகும். 

அதற்கேற்ப, பள்ளிகளில் ஆய்வுக்கு வரும் கல்வி அலுவலர்களுக்காகச் சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கும் கண்காணிப்புச் செயலியில் கூட இதுகுறித்து வினாக்கள் இருப்பது கூடுதல் சிறப்பு எனலாம். பல்வேறு காரணங்களால் இதுவரைக்கும் எண்ணும் எழுத்தும் முழுமையாகக் கற்றுக் கொள்ளாத மாணவர்கள் கூட இவ்விரு இதழ்களையும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களிடம் உரிமையோடு வந்து கேட்டுப் பெறும் வியக்கத்தக்க நிகழ்வுகளும் அன்றாடம் காண முடிகிறது. 


ஏனெனில், சரியாக எழுத்துக் கூட்டி வாசிக்க இயலாத கற்றல் குறைபாடுகள் மிக்க மாணவர்களையும் கவரத்தக்க வகையில் இந்த இதழ்கள் மிக நேர்த்தியாக உருவாக்க மிகச் சிறந்ததொரு வல்லுநர் குழுவைப் பல்வேறு நிதிநெருக்கடிகள் அரசுக்கு இருந்த போதிலும் நல்லவற்றை எப்பாடுபட்டாவது செய்து முடிக்க நல்ல மனம் மட்டும் இருந்தால் போதும் என்ற உயரிய எண்ணத்தில் தோற்றுவித்து விழலுக்கு இறைத்த நீராக வீண் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது. 


தொன்றுதொட்ட அனைவருக்கும் கல்வி முழக்கம் கூட முழு வெற்றி அடைவதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், அனைவருக்கும் வாசிப்பு என்பது பலதரப்பட்ட குழந்தைகள் மத்தியில் சாத்தியமாகி இருக்கிறது. இவையனைத்தையும் களத்தில் சாதித்துக் காட்டிய பெருமையும் பெருமிதமும் சம்பந்தப்பட்ட ஆசிரியப் பெருமக்களையே சாரும். 


எனினும், ஒவ்வொரு தொடக்க, நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மிகவும் பிடித்த உடற்கல்வி வகுப்பைக் களவாடிக் கொள்ளும் பொதுத் தேர்விற்குரிய முதன்மைப் பாடங்கள் மாதிரி அல்லாமல் நண்பகல் வாசிப்பு நேரம் நன்றாக நடைபெறுவதை வகுப்பாசிரியர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்துவதும் உறுதி செய்வதும் மாணவர்கள் நலன் கருதி மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. 


அதற்கேற்ப, ஒவ்வொருவருக்கும் இதைத் தனிச் சுற்றுக்கு அனுப்பி ஓரிரு நாள்கள் அவர்கள் அதை


வாசிக்க வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துவதைத் தலைமை

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

ஆசிரியர்கள் மேற்கொள்வது இன்றியமையாதது. 


மேலும், ஆசிரியர் தம் படைப்புகளையும் கற்றல் கற்பித்தல் பணி அனுபவங்களையும் புத்தாக்கங்களையும் ஒருமுறையாவது கனவு ஆசிரியர் இதழுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்பது நல்லது. 


தவிர, மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகம் பயன்பெறத்தக்க உறுதுணை புரியும் இவ்விரு பருவ இதழ்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்து வெளிவர தனிநபர் சந்தா மிகவும் அவசியமாகிறது. ஆகவே, பள்ளி மாணவர்களைத் தக்க பொருளாதார வசதியும் வாய்ப்பும் உள்ள பெற்றோர்கள் மூலம் சந்தாதாரர்கள் ஆக்க போதிய வழிகாட்டுதலை உரியவர்கள் மேற்கொள்ள உறுதி பூணுதல் காலத்தின் கட்டாயமாகும். இஃது ஆசிரியருக்கும் பொருந்தும். 


மேலும், ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் பரவலாக்கம் பெறவேண்டும். மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டிருக்கும் இதழ்ப் பொறுப்பாளர்கள் வழியாக, விடுபட்ட, வாய்ப்பு குறைந்த, போதிய அக்கறையும் விழிப்புணர்வும் ஆர்வமும் அற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இனிவரும் காலங்களில் இவை மாவட்ட சிறப்பிதழாக மலர முன்முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது பலரின் கருத்தாகும். 


இதன் காரணமாக, அந்தந்த மாவட்ட ஆசிரியர்களும் அவர்தம் மாணவர்களும் தம் பங்களிப்பை ஏதேனும் ஒரு வகையில் உறுதிசெய்ய மிகுந்த ஆர்வத்துடன் விழைவர் என்பது திண்ணம். 


அதைப்போலவே, இதழ் ஆசிரியர் குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தனித்திறனும் படைப்பாற்றலும் சற்றுக் குன்றியவர்கள் எனும் எண்ணத்தில் முன்பின் அறிமுகமில்லாத, யார் யாரோ போதிப்பதைக் கட்டாயத் திணிப்பாக, மூன்றாம் தரப்பினரின் ஆக்கங்களைத்தான் தந்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதமாக இருப்பதைக் கைவிட்டு இவற்றில் மக்களாட்சி மாண்பையும் அறத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். 


இத்தகைய தவறான கண்ணோட்டம் காரணமாக, தமக்கான இதழில் தமக்குரிய இடம் இல்லாததால் எழும் புழுக்கத்தையும் அவற்றின் மீது இயல்பாக வரும் நெருக்கத்தையும் இந்த இதழ்கள் இழந்து பத்தோடு பதினொன்றாகப் புறந்தள்ளிப் புறக்கணிக்கும் நிலை உருவாகக் கூடும். 


காட்டாக, கனவு ஆசிரியர் இதழில் வெளியிடப்படும் சிறுகதைப் பகுதியில் தேர்ந்த நல்ல படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருவது நல்லது. அதேவேளையில், தமிழகம் முழுவதும் பணிபுரியும்/ பணிபுரிந்த ஆசிரியர்களுள் பலர் தேர்ந்த சிறுகதைப் படைப்பாளர்களாக மாநிலம் முழுவதும் இருந்து வருவது அறியத்தக்கது. 


அவர்களது தகுதி மிக்க சிறுகதைப் படைப்புகளைக் கேட்டுப் பெற்று வெளியிடும் பட்சத்தில் அஃது ஆசிரியர்கள் மத்தியில் நல்லதொரு அணுக்கத்தையும் இணக்கத்தையும் தாமும் ஓர் படைப்பாளியாக மிளிர வேண்டும் என்கிற உத்வேகமும் எழுவதற்கு வழிவகுக்கும். சக தோழமை உணர்வு (Peer Group Feeling) ஒன்றே வாசிப்பின் மீது நேசிப்பை வளர்க்க பெரிதும் உதவும். 'இவரும் உங்களைப் போல் ஓர் ஆசிரியர்; இஃது இவரது படைப்பு' என்ற ஒரு சிறு குறிப்புரையுடன் அவை வெளியிடப்படுதல் அவசியம். 

ஏனெனில், பிறரது படைப்புகளை வாசிக்க பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இஃது முழுக்க முழுக்க ஆசிரியர்களுக்கான விலைமதிப்பற்ற ஊடகம். இஃது

TEACHERS NEWS
ஆசிரியர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாகும். 


ஆசிரியர் குழுவினரின் நோக்கம் யாரோ ஒரு ஆளுமையின் நல்ல படைப்பை வலிந்து வெளியிட்டு ஈடுபாடு காட்டாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை இதன் பக்கங்களைக் கடக்கச் செய்வதா? அல்லது பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கூட அறிமுகம் இல்லாத ஒருவரின் சாதாரண படைப்பாக இருந்தாலும் அனைவரின் ஆர்வத்தைத் தூண்டி இதனை வாசிக்க வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியதும் சரிசெய்ய வேண்டியதும் இன்றியமையாதது. 


ஏனெனில், அரிய புதையல் என்பது வெறும் பெட்டகமாக மட்டுமே எல்லோராலும் பாதுகாக்கப்படும். அறுசுவை விருந்து தான் பசிப்பிணி போக்கி அனைவருக்கும் நல்லதொரு மன நிறைவைத் தரும்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விலை மதிப்பற்ற ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள் இவர்களின் இதயங்களில் எதுவாக இருக்கப் போகின்றன? 


எழுத்தாளர் மணி கணேசன்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459