அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுடன் தற்காப்புக் கலை பயிற்சி, கல்விச்சுற்றுலா மற்றும் இலக்கிய மன்றம், விநாடி வினா போட்டி, கலைத் திருவிழா உள்ளிட்ட கல்விசாரா இணை செயல்பாடுகள், விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகிய முத்தரப்பின் தலையாய கடமை ஆகும்.
அந்த வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ( 2024 - 25 ) 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் பின்வரும் நடை முறைகளை பின்பற்ற அரசு ஆணையிடுகிறது. அரசு பள்ளிகளில் தரமான, இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வண்ணம் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
TEACHERS NEWS |
கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு களை பிரித்து கொடுத்து சேர்க்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment