தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/03/2024

தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

 

இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக 39 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், தேர்தல் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


தமிழகத்தில் சுமார் 4 இலட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இதில் பெருமளவில் ஈடுபடுவார்கள் எனவும் அறியப்படுகிறது. மேலும், மொத்தத்தில் 68,320 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.


இந்நிலையில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மிகத் துரிதமாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில், கடந்த கால கசப்பான அனுபவங்கள் அடிப்படையில் தற்போது அவை தொடராமல் இருக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


அதாவது, வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு 

அலுவலர்களுக்கான பணி நியமனம் தற்போது வகிக்கும் பதவி மற்றும் ஊதிய விகித அடிப்படையில் வழங்குவதை உறுதிப்படுத்துதல் இன்றியமையாதது. பதவியிலும் ஊதியத்திலும் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் திறம்பட கையாண்ட அனுபவத்தின் அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என்று பலரது கோரிக்கையைக் கவனத்தில் கொள்வது நல்லது.


அதுபோல், தேர்வுப்பணி,  விடைத்தாள்கள் திருத்துதல் பணி மற்றும் கல்வியாண்டு இறுதிப் பணி ஆகியவற்றில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கி வரும் ஆசிரியர்களுக்கு வார விடுமுறை ஓய்வு நாள்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை மனிதாபிமானம் கருதி தவிர்த்து உதவிடுதல் அவசியமாகும். 


வழக்கம் போலவே, இந்த முறையும் தேர்தல் பணியில் அதிக அளவில் ஈடுபடுபவர்களாகப் பெண் ஆசிரியைகள் உள்ளனர். எனவே, தேர்தல் பணிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் கலந்து கொள்ளும் பொருட்டு தொலைதூர மையங்களிலும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமப் பள்ளிகளிலும் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டியது இன்றியமையாதது.

TEACHERS NEWS
மேலும், இந்த இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதையும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஏற்படுத்தித் தருவதையும் உறுதிப்படுத்துவது தேர்தல் நடத்துபவர்களின் தலையாயக் கடமையாகும். 

தவிர, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விபத்து காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகளைக் கவனத்தில் கொண்டு ரூபாய் 50 இலட்சம் விபத்துக் காப்பீடு இலவசமாக வழங்கப்படுதல் வேண்டும்.

அதுபோல், தேர்தல் பணியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் அன்றி ஏனையோருக்கு தகுந்த மருத்துவ காரணங்களையும் வேண்டுகோள்களையும்


முற்றிலும் புறந்தள்ளி வீண் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்காமல் அத்தகையோருக்கும் மனிதாபிமானம் கருதி தேர்தல் பணியிலிருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும்..


மேலும், நூறு விழுக்காடு அஞ்சல் வாக்குப்பதிவை தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் சென்ற முறை போன்று இந்தத் தடவையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் பயிற்சி வகுப்பு மையங்களில் உரிய மக்களவைத் தொகுதிக்கான வாக்குச் சேகரிப்புப் பெட்டிகள் வைத்து உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். தேர்தல் பணி என்பது ஒரு தேசியப் பணிதான். புரிகிறது. அதேவேளையில், தேர்தல் பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வதும் முக்கியம் அல்லவா? இஃது ஒவ்வொரு ஆசிரியரின் பணிவான வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459