தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் /exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.
தேர்வுக்கு முந்தைய தினம் காலை 9 முதல் அடுத்த நாள் மதியம் 1 மணி வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது சிக்கல்கள் ஏற்பட்டால் ‘14417’ என்ற பள்ளிக்கல்வி உதவி மையத்துக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், தேர்வுக்கு முன்பாகவே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அச்சிட்டு வகுப்பாசிரியர்கள் தயாராக வைத்துக் கொள்வது அவசியம்.
அச்சிடுதலுக்கான செலவின நிதியை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், உரிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள்
வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடப்பு ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வினாத்தாள் வெளியாவதை (லீக்) தடுப்பதற்காக இந்த நடைமுறைகளை கல்வித்துறை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment