மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையாமல், தமிழக அரசு புறக்கணித்ததால், தமிழகத்துக்கான 1,045 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு, தமிழக அரசு சார்பில், நடப்பு நிதியாண்டுக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் பெரும்பாலான நிதி, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறை பணியாளர்களின் ஊதியம், பென்ஷன் மற்றும் இதர சலுகைகளுக்கு செலவாகி விடுகிறது. அதேநேரம், பள்ளிகளை தரம் உயர்த்துதல் உட்பட பல திட்டங்களுக்கு, மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிதியுதவி நிறுத்தம்
இந்த நிதி, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதைப் பெற, மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு இதுவரை, 2,090.76 கோடி ரூபாய் நிதி வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விட்டுள்ளது. அதில், இரு தவணைகளாக 1,045.38 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1,045.38 கோடி ரூபாய் நிதி பாக்கி உள்ளது.
இந்நிலையில், நிதி வழங்க முடியாது என மத்திய அரசு திடீரென நிறுத்தியுள்ளது. அதனால், தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நவீன பள்ளிகள் திட்டம்
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்: கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்கான, மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திட்டத்தில், தமிழக அரசு இன்னும் இணையாமல் உள்ளது
அதேபோல், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் என்ற பெயரில், மத்திய அரசின் புதிய திட்டம் 2022ம் ஆண்டில் அறிமுகமானது. இதில், அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்கள் இணைய வேண்டும். இந்த திட்டத்தில், நாடு முழுதும் முதற்கட்டமாக 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். அவற்றில், புதிய கல்வி கொள்கை அமலாகும். நவீன வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நீர் பாதுகாப்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு, நவீன விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி என, பல்வேறு முன் மாதிரி நவீன கட்டமைப்புகள், மத்திய அரசின் நிதி உதவியில் ஏற்படுத்தப்படும்.
இதுவரை, இந்த திட்டத்தில் 29 மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. பீஹார் மாநிலம் இணைய முயற்சித்து வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே இணைந்து, அரசியல் காரணங்களால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ளது.
மாநில அரசுகளுக்கு 'செக்'
தமிழகம், மேற்கு வங்கம், டில்லி, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் இன்னும் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையவில்லை. பிரதமரின் சிறப்பு திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு வழங்கப்படும், சமக்ர சிக் ஷா நிதி உதவியை, மத்திய அரசு அதிரடியாக நிறுத்திஉள்ளது.
இந்த வகையில், பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததால், நடப்பு நிதியாண்டுக்கான 1,045.38 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. மார்ச் மாதத்துடன் நடப்பு நிதியாண்டு முடிவதால், இனி இந்த நிதி தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நிறுத்தப்பட்ட பணம்
இதுவரை, 2,090.76 கோடி ரூபாய் நிதி வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விட்டுள்ளது. அதில், இரு தவணைகளாக 1,045.38 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1,045.38 கோடி ரூபாய் நிதி பாக்கி உள்ளது.
செயல்படுத்தப்படும் பணிகள்
* உள்கட்டமைப்பு மேம்பாடு
* நவீன ஹைடெக் ஆய்வகங்கள் அமைத்தல்
* தரம் உயர்த்திய பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல்
* கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் வழங்குதல்.
வசதிகள்
* நவீன வகுப்பறைகள்
* ஸ்மார்ட் வகுப்பறைகள்
* நீர் பாதுகாப்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு
* நவீன விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி
No comments:
Post a Comment