டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, ஐந்து பேர் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள், கவர்னர் ஒப்புதலுடன், தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர். சமீப காலமாக, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் இல்லாமல், நான்கு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக சிலரையும் நியமிக்க, முதல்வர் கவர்னருக்கு பரிந்துரை செய்தார். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கோரும் கோப்பை, கவர்னர் நிராகரித்து விட்டார்.
இதுதொடர்பாக, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் இருந்த நிலையில், நேற்று புதிதாக ஐந்து பேரை, கவர்னர் ஒப்புதலுடன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவனருள்; ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார்; டாக்டர் தவமணி; உஷா சுகுமார்; பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.சிவனருள் திருப்பத்துார் மாவட்ட கலெக்டராக இருந்தவர். அதன்பின் பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். உறுப்பினர் உஷா சுகுமார், எமர்ஜென்சி காலத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் சிறையில் இருந்து சித்ரவதைக்கு உள்ளான மேயர் சிட்டிபாபுவின் மருமகள்.ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார், சேலத்தை சேர்ந்தவர். இவரது மனைவி கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராக பணியாற்றுகிறார். பிரேம்குமார் கோவை ஸ்ரீ நாராயண குரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வராக உள்ளார். பெண் மருத்துவர் தவமணி, முதல்வரின் கொளத்துார் தொகுதியை சேர்ந்தவர்.இவர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது நிறைவு ஆகியவற்றில் எது முந்தையதோ, அதுவரை பதவியில் இருப்பர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, இன்னும் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.
No comments:
Post a Comment