புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு எடுத்தது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் கோப்பு தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்தாண்டு நவம்பர் 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் மிட்டாய் வழங்கப்படுகிறது. 486 பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைய இருக்கிறார்கள்.
இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: “எங்களுடைய அரசு சொன்னதை செய்கின்ற அரசாகத்தான் இருக்கும் என்று அடிக்கடி சொல்வேன். அதன்படி, சொன்னதை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் ஒன்றாக சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம். கரோனா வந்த பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படிக்கும் சூழல் ஏற்பட்டதால், செல்போன், மடிக்கணினியை மாணவர்கள் பயன்படுத்தி படித்தார்கள். இதனால் மடிக்கணினி அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அறிவித்தப்படி மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கும் நிச்சயமாக மடிக்கணினி வழங்கப்படும். கடந்த ஆட்சியில் உள்ளாட்சி துறை மூலம் சாலை போடவில்லை. எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கொடுக்கவில்லை என்று அப்போது நமச்சிவாயத்திடம் கேட்டபோது, நிதி எதுவும் கொடுக்கவில்லை. எதையும் செய்ய முடியவில்லை என்று புலம்புவார். இதனால்தான் ஒருசில முடிவுகளை அமைச்சர் நமச்சிவாயம் எடுத்தார்.
இந்தாண்டை பிரதமர் மோடி சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார். சத்துணவு மிகவும் அவசியமான ஒன்று. அது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். கரோனா வந்த பிறகுதான் சத்துணவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்தது. பிள்ளைகள் சத்தான உணவு சாப்பிடும்போது எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராது.
ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். அதனால், சிறுதானியங்களை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று எண்ணி இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். மடிக்கணினி, புத்தகங்கள் வைத்து எடுத்து செல்லும் வகையில் பேக் கொடுக்க வேண்டும் என்ற கல்வி அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
நிச்சயமாக மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்படும். அரசு கல்வித்துறைக்கு நிறைய நிதி ஒதுக்கி செலவு செய்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்தை அமல்படுத்தி உள்ளோம். எனவே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தி விடுகிறது. இதுபோன்ற வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
1500 தொழிற்சாலைகள் புதுச்சேரியில் இருக்கிறது. 85 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையையும் அரசு கொடுத்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு கூட்டறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டியது மிக அவசியமான ஒன்று. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆலையை திறந்து நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. விரைவில் திறந்து நடத்தப்படும். அரசு திட்டங்கள் உரிய நேரத்தில் சரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் பேசினார்
No comments:
Post a Comment