உயர் கல்வித்துறையில் கலை, அறிவியல் கல்லூரிகள் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டிலும், பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்பம் சாராத பிபிஏ மற்றும் பிசிஏ ஆகிய படிப்புகள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளிலும் தொடங்கப்படும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. மேலும் இப்படிப்புகளை தற்போது நடத்தி வரும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கலை மற்றும் அறிவியல், மேலாண்மை கல்லூரிகள் நலச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏஐசிடிஇ-க்கு அனுப்பி வைக்கப்பட்டும் எந்த பதிலும் இல்லை எனக்கூறி தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லூரிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பிபிஏ, பிசிஏ படிப்புகள் தொடர்பான ஏஐசிடிஇ அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும், என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எல்.சோமயாஜி, ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, “கலை அறிவியல் கல்லூரிகள் வழங்கிவரும் பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளை ஏஐசிடிஇ வரம்புக்குள் கொண்டுவர அதிகாரம் கிடையாது. உரிய சட்ட திருத்தம் செய்யாமல் இந்த படிப்புகளுக்கான வரம்புகளை மாற்ற முடியாது. அவ்வாறு மீறி கொண்டு வந்தால் அதன்மூலம் மாநில அரசு மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் வருவாய் பாதிக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்” என வாதிட்டனர்.
அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க ஏஐசிடிஇ சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்.5-க்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும், என நீதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment