குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய கல்வி கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, 5 3 3 4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை (3-8 வயது) 5 ஆண்டுகள், 3 முதல் 5-ம் வகுப்பு வரை (8-11 வயது) 3 ஆண்டுகள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை (11-14 வயது) 3 ஆண்டுகள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை (14-18 வயது) 4 ஆண்டுகள் என 4 நிலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை 6 வயதில் தொடங்கினால்தான், அடுத்தடுத்த படிநிலைகள் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில், அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிப் படிப்பை தொடங்குவதற்கு முன்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கான தயார்நிலையை கருத்தில் கொண்டு இந்த வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 வயதில்தான் குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய, முக்கியமான கட்டத்தில் இருப்பார்கள். அந்த வயதில் பள்ளிப் படிப்பை தொடங்கினால், கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம்போல, டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் 5 வயதில்தான் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கர்நாடகா, கோவாவில் 5 வயது 10 மாதங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தற்போது 6 வயதில்தான் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் 3, 4, 5-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment