மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு 440 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் முந்தைய ஆண்டுகளைவிட 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சற்று முன்னேற்றம் கண்டிருந்தது. எனினும், சில கல்லூரிகளில் சேர்க்கை ஒற்றைஇலக்கத்தில்தான் அமைந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 11 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பல்கலை. அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 11 பொறியியல் கல்லூரிகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படாது. 2023-24-ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை கொண்ட 67 கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் அளிக்கப்படும். இதை பின்பற்றாத கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment