ஆசிரியர், மாணவர் விகிதம்1 : 20 ஆக மாற்றப்படுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/02/2024

ஆசிரியர், மாணவர் விகிதம்1 : 20 ஆக மாற்றப்படுமா?

 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக, மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை, 20:1 ஆக மாற்றியமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், அரசு பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.போட்டிகள் நிறைந்த உலகில், தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையே, இதற்கு முக்கிய காரணம்.கல்விக் கட்டணம் கிடையாது.


புத்தகம், சீருடை, எழுது பொருட்கள், நோட்டு, மதிய உணவு இலவசம், கல்வி உதவித்தொகை போன்ற எண்ணற்ற சலுகைகள், அரசு பள்ளிகளில் இருந்தாலும், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகிறது.


இது தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன், கல்வித் துறை அதிகாரிகள் தலைமையிலான ஆசிரியர்கள் குழு, ஆய்வு நடத்தியது. அதில், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதம், 40:1 என்ற ரீதியில் இருப்பதே, கல்வித் தரம் குறைய காரணம் என தெரிய வந்தது.அதாவது, 1989க்கு முன் வரை மாணவர், ஆசிரியர் விகிதமானது, 20:1 என்ற ரீதியில் இருந்தது.


இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடிந்தது. ஆரம்பக் கல்வியில், மாணவர்களை பக்குவப்படுத்தி, அவர்களை படிக்க வைப்பது என்பது சிரமமானது.இந்நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசு, மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை, 40:1 ஆக மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதற்கு, ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டத்தை கைவிடுவதாக அரசு அறிவித்தது.


ஆனால், 1991ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு, அதிரடியாக மாற்றப்பட்டனர். 


இதனால், 1.80 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில், தற்போது, 1 லட்சத்துக்கும் குறைவான ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவது என்பது, இயலாத செயலாகும்.எனவே, மாணவர், ஆசிரியர் விகிதத்தை, மீண்டும், 20:1 ஆக மாற்றியமைக்க வேண்டும்.


இல்லாத பட்சத்தில், 30:1 ஆகவாவது மாற்ற வேண்டும் என, ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில், தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.'தற்போது, கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்திருக்கும் தமிழக அரசு, மாணவர்கள், ஆசிரியர் விகிதத்திலும் மாற்றம் செய்ய வேண்டும்.'கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, உபரி ஆசிரியர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

A0025

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459