அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்தகுரூப்-2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்வாணைய இணைச் செயலர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். நான்கு அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி விசாரித்து முடித்து நான்கு மாதங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டறிய ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தனது விசாரணையை முடித்து மூன்று மாதங்களில் குழு அறிக்கை அளிக்க வேண்டும்.எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடைமுறைகளையும் விசாரணைக் குழு பரிந்துரைக்க வேண்டும். விசாரணைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் தேர்வாணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு தேர்வாணையத்தின் மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment