டிஎன்பிஎஸ்சி வந்தாச்சசு.. டிஆர்பி என்னாச்சு.. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிருப்தியில் பட்டதாரிகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/01/2024

டிஎன்பிஎஸ்சி வந்தாச்சசு.. டிஆர்பி என்னாச்சு.. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிருப்தியில் பட்டதாரிகள்

 

trb2-1704081452

டிஎன்பிஎஸ்சி 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுவிட்ட நிலையில், டிஆர்பி எனப்படும்ஆசிரியர் தேர்வு வாரியம், 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை இன்னமும் வெளியிடவில்லை.. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


அரசு பணிகளும், ஆசிரியர் பணிகளுமே, பொதுத்துறை வங்கி பணிகளுமே, தற்போதைய சூழலில் பணி பாதுகாப்பு, நிரந்தர வேலை, நல்ல சம்பளம் கிடைக்கிறது.. இதனால் எப்படியாவது அரசு ஊழியர்களாகவோ, ஆசிரியர் ஆகவோ, வங்கிபணியாளர் ஆகவோ மாற வேண்டும் ஆசைப்படுகின்றனர். வங்கிகளை பொறுத்தவரை அகில இந்திய அளவில் நடப்பது.


அதேநேரம் அரசு பணி,ஆசிரியர்பணி என்பது தமிழ்நாடு அளவில் இருக்கிறது. இந்த பணிகளை சேர கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படும். 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை இன்னமும் வெளியிடவில்லை. மேலும் 2023ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற 9 அறிவிப்புகளில் ஒன்றுக்கு மட்டுமே டிஆர்பி தேர்வு நடத்தி இருக்கிறது.


டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை தேர்வு செய்கிறது. இதுதவிர ஆசிரியர் தகுதித்தேர்வையும் (டெட்) டிஆர்பி தான் ஆண்டு தோறும் நடத்தி வவருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், துறைவாரியாக எவ்வளவு பணியிடங்கள், தேர்வு தேதி, அறிவிப்பு வரப்போகும் மாதம் போன்ற தகவல்கள் அந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கும். அதனை பார்த்து தான் போட்டித்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார் ஆவார்கள்.


அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்படும். ஆனால் 2024-ம் ஆண்டு பிறந்தும் இன்னும் டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியாகவில்லை. இதனால் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்கு தயாராகும் பட்டதாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


இதனிடையே கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டிஆர்பி தேர்வு அட்டவணையில் மொத்தம் 9 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் வெறும் 2 அறிவிப்புகள் (பிஇஓ தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு) மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் பிஇஓ தேர்வு மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் 2023 ஆண்டு தேர்வு அட்டவணையில் இடம்பெற்றிருந்த அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு, அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, டெட் தேர்வு ஆகிய 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன. இதுதவிர டெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. 2023 தேர்வு அட்டவணையின்படி புதிய டெட் தேர்வுக்கு இன்னும் அறிவிப்பே வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கூற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459