அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் முதல்வரான பழனிசாமி எங்கள் வாழ்வதாரங்களுக்காக நியாயமான போராட்டங்களை தொடங்கியபோது, அவற்றை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் எங்களை உதாசீனப்படுத்தினார்.
அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தீர்கள். தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 3 ஆண்டு முடியும் தருவாயில், எங்கள் கோரிக்கைகளில் ஒன்றின் மீது கூட தாங்கள் உத்தரவிடாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இனிமேலும் பொறுமையாக காத்திருப்பது அர்த்தமற்றது என்று உணர்ந்து ஜாக்டோ-ஜியோ போராட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜன.22 முதல் 24 வரை மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், ஜன.30-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், பிப்.5 முதல் 9 வரை பாஜக, அதிமுக தவிர்த்து மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்.10-ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்.15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சருடன் சந்திப்பு: இதற்கிடையில், நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஜாக்டோ- ஜியோ அமைப்பின் அங்கமான தமிழ்நாடு தலைமைச்செயலக சங்க நிர்வாகிகள் கு.வெங்கடேசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது மனிதவள மேலாண்மைத் துறை அனுப்பிய கடிதத்தில் உள்ள முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
No comments:
Post a Comment