பல்கலைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் பதிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலை மாதிரிக் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ரமேஷ். பணியை வரன்முறைப்படுத்தி, பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.
அரசு தரப்பு: விதிகளை பின்பற்றி மனுதாரர் நியமிக்கப்படவில்லை. கவுரவ விரிவுரையாளராக தற்காலிக அடிப்படையில் பணிபுரிகிறார். வரன்முறைப்படுத்துமாறு கோர உரிமை இல்லை. இவ்வாறு தெரிவித்தது.
நிலையற்ற தன்மை நீதிபதி: பல்கலைகளில் ஒப்பந்த அடிப்படையில் கவுரவ பேராசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கின்றனர். இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள பல பல்கலைகளில் இம்மனுதாரரைப் போல் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவது இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பும் இல்லாமல் முழு வாழ்க்கையும் வீணாகிறது.
கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்படுவோர் நிரந்தர பேராசிரியர்களுக்கு இணையான பணியை மேற்கொள்வர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்படுவோர் 22 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பின்பும், குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக கருதப்படுவர்.
இவர்களுக்கு நிலையற்ற தன்மையால் வேதனை ஏற்படுகிறது.கொள்கை முடிவு தேவைஇச்சிரமங்களை தவிர்க்க அரசுகள் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அதற்கான நிலையில் அரசு இல்லை எனில் சம வேலைக்கு சம ஊதியம், என்பதைப் பின்பற்றி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அனுமதித்த பணியிடங்களை பல ஆண்டுகளாக காலியாக வைத்து, தற்காலிக அடிப்படையில் நியமனம் மேற்கொள்வது படித்த தகுதியுள்ள நபர்களை சுரண்டுவதற்கு சமம். அது சட்டவிரோதமானது.முதன்மை பொறுப்புதுவக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என அனைத்து நிலைகளிலும் கல்வித்துறைக்கு வசதிகளை வழங்க வேண்டிய முதன்மையான பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல பல்கலைகள் போதிய நல்ல ஆசிரியர்கள் கிடைக்காமல் தரமான கல்வியை வழங்குவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
தற்போது பல பல்கலைகள்/உயர்கல்வி நிறுவனங்கள் தற்காலிக மற்றும் கவுரவ பேராசிரியர்கள் மூலம் உயர் கல்வியை வழங்குகின்றன என்ற உண்மையை புறக்கணிக்க முடியாது.பல்கலைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள், பல்கலை மானியக்குழு, உயர்கல்வி தொடர்புடைய அனைத்து சட்டப்பூர்வ அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
இவ்வழக்கில் மனுதாரர் அனுப்பிய மனுவை பாரதிதாசன் பல்கலை பரிசீலித்து நீதியின் நலன் கருதி நியாயமான முடிவை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment