வெறும் 3,772 TNPSC வேலைவாய்ப்பு; அரசு வேலை இனி கனவாகிடுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2023

வெறும் 3,772 TNPSC வேலைவாய்ப்பு; அரசு வேலை இனி கனவாகிடுமா?

 tnpsc554.jpg?w=400&dpr=3

டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3,772 வேலை வாய்ப்புதான் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்குமா? அரசு வேலை இனி கனவாகிவிடுமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,  தமிழக அரசுத் துறைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர்   போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் பத்தாயிரத்தில் மூவருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என்பது படித்த இளைஞர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024-ஆம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின்  அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 18 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ள ஆணையம், அவற்றில் 15 வகை பணிகளுக்கு 3439 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. மீதமுள்ள 4 போட்டித் தேர்வுகளில் நான்காம் தொகுதி பணிகளுக்கானத் தேர்வு கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட தேர்வாணையம் தவறி விட்ட நிலையில், அத்தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட்டு, ஜூன் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நான்காம் தொகுதி பணிக்கான போட்டித் தேர்வுகளை 2024-ஆம் ஆண்டுக்கான கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.


போட்டித் தேர்வுகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்படாத சிவில் நீதிபதிகள், ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள், பொறியியல் பணிகள் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் அடிப்படையில் கணக்கிட்டால், முறையே 245, 51, 37 என மொத்தம் 333 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களையும் சேர்த்தால் 2024-ஆம் ஆண்டில், நான்காம் தொகுதி பணிகள் தவிர்த்து, 3,772 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும். இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.


அரசு வேலைக்காக 1.30 கோடி பேர் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் 0.029 விழுக்காட்டினருக்கு, அதாவது பத்தாயிரத்தில் மூவருக்கு  தான் அரசு வேலை கிடைக்கும் என்றால், இது என்ன சமூகநீதி?


தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தவம் கிடக்கின்றனர். அரசுத் துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். அவை முழுமையாக நிரப்பப்பட்டால் ஆண்டுக்கு 50ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும். ஆனால், அதை செய்வதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. அரசே காலியிடங்களை நிரப்ப ஆணையிட்டால் கூட, முறையாகத் தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு பணியாளர் தேர்வாணையம் தயாராக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை என்பதே கனவாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459