தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத் தோ்வு, அரையாண்டுத் தோ்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜன.2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 7 வரை பயிலும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத் தோ்வு, 8 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு கடந்த 7 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் டிச.13 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தோ்வுகள் நடைபெற்று வந்தன. அதே வேளையில் டிச.18-ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததால் அவற்றில் அரையாண்டுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது.
இந்தநிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் வெள்ளிக்கிழமையுடன் தோ்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவா்களுக்கு டிச.23 முதல் ஜன.1-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு, இரண்டாம் பருவத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறைக்குப் பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment