தென் மாவட்ட மக்களுக்கும் 1000 முதல் 6000 வரை நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2023

தென் மாவட்ட மக்களுக்கும் 1000 முதல் 6000 வரை நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு


 திருநெல்வேலி: “அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடை இழப்பைச் சந்தித்த மக்களுக்கும் தமிழக அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும்.

  • மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5000-ஐ ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மழையினால் 33 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இரவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500-லிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக சேதமடைந்திருந்தால் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000-லிருந்து ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு அதிகமாக பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக் குஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • ரூ.33,000-ஆக இருந்த எருது, பசு,உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • ரூ.3000 ஆக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை, ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு மீன்பிடி வலைகள் உள்பட ரூ.32,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கிடவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.15,000 வழங்கிடவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு ரூ.7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த வலைகளுக்கு ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
  • அதிகனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்படும்.
  • நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்திலே கொண்டு, அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்.

சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் சந்தித்ததைப் போல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் சந்தித்தன. சென்னையை சுற்றியுள்ள மக்களை காத்ததைப் போல தூத்துக்குடி மற்றும் நெல்லையை சுற்றியுள்ள மக்களை தமிழக அரசு காக்கும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். கடுமையான மழைப்பொழிவு 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்படும் என்பதை, சென்னை வானிலை ஆய்வு மையம் 17-ம் தேதி அறிவித்தது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த மழையளவை விட பலமடங்கு மழைப்பொழிவு அளவு அதிகமாக இருந்தது. இதனால், இந்த மாவட்டங்களில் இந்த மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. ஒருசில இடங்களில் 1871-ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பல வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மழை அளவைவிட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழக அரசு முன்கூட்டிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மழைப்பொழிவு அதிகமான உடனே, 10 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட வாரியாக ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நியமிக்கப்பட்டனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், படகுகள், உபகரணங்கள் உடன் 375 வீரர்கள், கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையின் 10 குழுக்கள் களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் ராணுவ வீரர்கள் 168 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுவரை, 12,653 பேர் மீட்கப்பட்டு, 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழையினையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து நானும், தலைமைச் செயலாளரும் பலமுறை அதிகாரிகள் உடன் காணொளி மற்றும் தொலைபேசி வழியாகவும் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம்.

19ம் தேதி இரவு, பிரதமர் மோடியை புதுடெல்லியில் சந்தித்து தமிழகத்தில் நடந்த இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்கு தேவைப்படும் நிதியினை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, உடனடியாக வழங்கிட கோரிக்கை மனுவினை அளித்துள்ளேன். தென்மாவட்டங்களுக்கு மட்டும் 2000 கோடி ரூபாய் முதற்கட்டமாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளேன். யில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன், வீடியோ கால் மூலம் பேசி அவர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தேன். இந்த இரு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் காணொளி வாயிலாக தகவல்களைக் கேட்டறிந்தேன். முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை விரைவாக செய்துதர உத்தரவிட்டேன்.

சென்றடைய முடியாத கிராமங்களில் இருக்கும் மக்களின் நிலை குறித்தும், அவர்களை மீட்பதற்கான அவசரப் பணிகள் குறித்தும், எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கேட்டறிந்து, அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கேட்டுக் கொண்டேன். தண்ணீர் சூழந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு, உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்ந்த் சிங்குக்கு கடிதம் எழுதினேன். அவர்களும் அனுப்பி வைத்துள்ளனர். அனைவரது சிறப்பான பணிகளாலும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459