கடந்த 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மின் விநியோகம் பாதிக்கப்பட்டு 4 மாவட்டங்களும் இருளில் மூழ்கின. தொலைத்தொடர்பு முற்றிலும்முடங்கியது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல பகுதிகளும் தனித்தீவுகளாக மாறின. தற்போது வெள்ளம் வடிந்து தென் மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள்) பெருமழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. அந்த நினைவுகளை 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பகிர்ந்துள்ளது. அதே நாள்.. அதே வெள்ளம். . அதே ஊர்கள்.. அதே மாதிரியான பாதிப்புகளை 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் சந்தித்திருப்பதை 'தி இந்து' நாளிதழின் அன்றைய செய்திகள் விவரிக்கிறது. அந்த செய்திகளின் தொகுப்பு வருமாறு:
1923 டிசம்பர் 17: கடந்த இரு நாட்களாக பெய்த பெருமழை யால் வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாலை மட்டத்துக்கு வெள்ளம் பாய்கிறது. எனவே நதிக்கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.
1923 டிசம்பர் 19: கடந்த 4 நாட்களாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் சில பெரிய பெரிகளில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. திருநெல்வேலி டவுன், சன்னியாசிகிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் 3 முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ரயில் நிலையங்களின் ஆவணங்கள், ஊழியர் குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் இருபுறமும் சுமார் 4 மைல் தொலைவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான தந்தி கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில்வே தண்டவாளம் தண்ணீரில்மூழ்கி உள்ளது. தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதை பாதிப்பின்றி உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருநெல்வேலியில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒட்டுமொத்த திருநெல்வேலியும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
திருநெல்வேலியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. சுமார் 5,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 10,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 1,000 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கங்கைகொண்டான், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே தற்காலிக ரயில் நிலையம் அமைக்கப்படும். மணியாச்சி முதல் தற்காலிக ரயில் நிலையம் வரை குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்வே துறைக்கு ரூ.60 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஏராளமான சடலங்கள் மிதப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1923 டிசம்பர் 21: அம்பாசமுத்திரத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. அதீத மழை பெய்து வருகிறது. இதுபோன்ற மழையை பார்த்தது இல்லை என்று மூத்த குடிமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1826, 1914-ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அம்பாசமுத்திரம் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போதைய வெள்ளத்தில் பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தை சரிசெய்து, மீண்டும் போக்குவரத்தை உறுதிபடுத்த ஒரு மாதத்துக்கு மேலாகும்.
கடையம், ரவணசமுத்திரம், சேரன் மகாதேவி, மேலக்கல்லூர், பேட்டை, திருநெல்வேலி டவுன் பகுதிகளில் ரயில் பாதை சேதமடைந்துள்ளது. திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் பாதையும் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. இவ்வாறு 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்திகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment