TRB - ஆசிரியர் பணி தேர்வுக்கு இதுவரை 28,588 போ் விண்ணப்பம் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/11/2023

TRB - ஆசிரியர் பணி தேர்வுக்கு இதுவரை 28,588 போ் விண்ணப்பம் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Teachers-Recruitment-Board

அரசு பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க, டிச., 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசுப் பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வுக்கு தற்போது 28,588 போ் விண்ணப்பித்துள்ளனா்; தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் டிச.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பிற பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வு ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது . இதைத் தொடா்ந்து ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாளில் தோ்ச்சி பெற்றவா்கள் நவ.1-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான அவகாசம் நவ.30-ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவகாசம் டிச.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


விண்ணப்பதாரா்களின் வேண்டுகோளை ஏற்று பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய பயிற்றுநா் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி நவ.30-இல் டிச.7-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


திருத்தங்கள் எப்போது? இதையடுத்து விண்ணப்பதாரா்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (‘எடிட் ஆப்சன்’) மேற்கொள்ள அவகாசம் கோரியதன் அடிப்படையில் கட்டணம் செலுத்தியவா்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் டிச.8, 9 ஆகிய இரு நாள்களில் திருத்தம் செய்ய ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


விதிமுறைகள்: விண்ணப்பதாரா்கள் தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் திருத்தம் செய்ய இயலாது; மாற்றங்கள் செய்து சமா்ப்பித்த பின்னா் அதில் வேறு மாற்றங்களைச் செய்யக் கூடாது; எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை என்றால் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தில் கட்டணத் தொகையில் திருத்தம் செய்யும்போது குறைவாக கட்டணத் தொகை செலுத்த வேண்டியிருப்பின் , விண்ணப்பதாரா் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித் தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.


விண்ணப்பதாரா்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள சமா்ப்பி (‘சப்மிட்’) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2,582 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை மாலை வரை 28,588 போ் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459