தமிழகத்தில் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சி.பி.எஸ்., வல்லுனர் குழு தனது அறிக்கையினை தமிழக அரசிடம் வழங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த அறிக்கையினை இதுவரை வெளியிடாதது ஏன் என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி. பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பில் அவர் கூறியதாவது: 2016 பிப்.,ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய காலவரையற்ற போராட்டத்தின் விளைவாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா சீலா நாயர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
பலமுறை காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் சாந்தா சீலா நாயர், முன்னாள் முதல்வர் ஜெ., வின் மறைவுக்குப் பிறகு பதவி விலகினார். அதன் பிறகு டி.எஸ்.ஸ்ரீதர் குழுவிற்கு தலைமை வகித்தார். அவர் தலைமையிலான குழு தனது அறிக்கையினை 2018 நவ. 25ல் அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் வழங்கியது.
அறிக்கையினை பெற்றுக்கொண்ட அவர் வல்லுனர் குழு அறிக்கை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்படைக்கப்பட்டது. 2021 தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்துவோம் என அறிவித்தது.
தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் இன்று வரை திட்டத்தை ரத்து செய்யவில்லை. வல்லுனர் குழு அறிக்கையும் வெளியிடவில்லை.
அ.தி.மு.க., தி.மு.க., அரசுகளின் மூடி மறைக்கும் செயல்பாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சி, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
No comments:
Post a Comment