தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது நீங்கள் அறிந்த ஒன்றே.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இதுவரை மென்தமிழ் (தமிழ்ச் சொல்லாளர்) (2013), விருபா – வளர்தமிழ் நிகண்டு (2014), விவசாயம் (2015), www.tamilpulavar.org (2016), பிரிபொறி (2017), தமிழ் உரைவழி பேச்சு உருவாக்கி (2018), ‘வாணி’ தமிழ்ப் பிழைத் திருத்தம் (2019), ‘செவ்வியல் இலக்கண இலக்கியம்’ (2020), வட்டெழுத்து (2021). ‘தமிழ்ப்பேச்சு’ மேம்படுத்திய பதிப்பு (2022) உள்ளிட்ட மென்பொருள்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் 2023ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2020, 2021. 2022ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.lamilvalarchithurai.tn.gov.in) அல்லது //awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர்.
சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023ம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 – 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை நினைவிற்கொள்ள கனிவுடன் வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment