அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழா முன்பணத்தை உயர்த்தித் தர வேண்டுகோள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/10/2023

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழா முன்பணத்தை உயர்த்தித் தர வேண்டுகோள்

 நடுத்தர வர்க்கத்தினராக வாழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ஈஸ்டர், ரம்ஜான், மீலாது நபி, பக்ரீத், ஓணம், ஆகிய சமயம் சார்ந்த பண்டிகைகளும்  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தேசிய விழாக்களும் முக்கிய தினங்களாக உள்ளன. இக்காலகட்டத்தில் நிகழும் கூடுதல் குடும்ப செலவினத்தைச் சமாளிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு இவற்றிற்கு பண்டிகை கால முன்பணக்கடன் அளித்து வருகிறது. 

இக்கடன் ஒரு நாள்காட்டி ஆண்டில் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். மேலும், இக்கடனுக்கு வட்டி கிடையாது. பத்து சம தவணைகளாக இது மாத ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றது. இத்தொகை பண்டிகை நாளுக்கு முன்னர் விழா முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

முதன்முதலில் ரூ.500 ஆக இருந்த இந்த விழா முன்பணக்கடன் ரூ.750 ஆக உயர்ந்து, பிறகு ரூ. 1000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ரூ. 2000 ஆக உயர்த்தித் தரப்பட்டது. பிறகு அதிலிருந்து ரூ. 5000 ஆகவும் கடந்த எடப்பாடியார் ஆட்சியில் அது இரட்டிப்பாக ரூ. 10000 ஆக தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும் மக்களிடையே அதிகரித்து வரும் கோலாகல கொண்டாட்ட மனநிலைப் பாதிப்பாலும் இந்த முன்பணக்கடனை மேலும் அதிகரித்துத் தர தற்போதைய எல்லோருக்குமான விடியல் அரசிடம் 12 இலட்சம் அரசு ஊழியர்களும் 3 இலட்சம் ஆசிரியர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.

கட்டாயம் திரும்பப் பெறப்படும் இந்த வட்டியில்லா விழா முன்பணக்கடன் தொகையை ரூ. 15000 வரை


நடப்பு நாள்காட்டியாண்டில் உயர்த்தித் தந்து அவற்றை பத்து சம தவணைகளாக பிடித்தம் செய்து உதவிட தமிழக முதல்வர் தக்க ஆணை பிறப்பிக்க வேண்டியது அவசர அவசியமாகும்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459