தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 500-க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.
இந்நிலையில், ஆக.7-ம் தேதி இப்பள்ளி ஆசிரியை சரண்யா, பள்ளி மைதானத்தில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் தலையில் காயமடைந்தார். இது தொடர்பாக ஆசிரியை சரண்யா, வல்லம் போலீஸில் புகார் அளித்தார். ஆசிரியை சரண்யாவின் கணவர், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இதைத் தொடர்ந்து, சாதாரண உடையில் போலீஸார் சிலர் அக்.8-ம் தேதி பள்ளிக்குச் சென்று, மாணவர்களை ஒரு வகுப்பறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதாகவும், அப்போது, மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி, அன்று மாலை பள்ளியை பெற்றோர் சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெற்றோர் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் அறிக்கை அனுப்புமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்புக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment