வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/10/2023

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. அதேநேரத்தில், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக். 21-ல் (நேற்று) தொடங்கி உள்ளது. அக். 21-ம்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ., மாம்பழத்துறை, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து தீவிர மற்றும் மிக தீவிர புயலாக வலுப்பெற்று,


ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை.


புயல் காரணமாக வரும் 25-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அக். 22-ல் (இன்று) வலுப்பெற்று, வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.


எனவே, வரும் 26-ம் தேதி வரை வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை.


தமிழகத்தில் லேசான மழை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


அரபிக் கடலில் நிலவிவரும் புயல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் வலு குறைந்து காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அடுத்து வரும் 6 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்காது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவிலேயே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459