ஒருநாள் உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்றதே இல்லை எனும் ரெக்கார்டை அப்படியே வைத்து 8-0 என அற்புதமாகச் சாதித்திருக்கிறது இந்தியா.நஇப்போது அஹமதாபாத்தில் நடந்த போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றிருக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் ஒவ்வொன்றுக்குமே காலம் கடந்து நிற்கும் சக்தி இருக்கிறது. இரு அணிகளுக்குமிடையேயான ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு எதிர்கொள்ளலும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டேதான் இருக்கும். அந்த வரலாற்றில் தனக்கென ஒரு இடம் வேண்டும் என ஒரு தனிப்பட்ட வீரர் ஆசைப்பட்டால், எக்காலத்துக்கும் மறக்கமுடியாதபடிக்கு ரசிகர்களின் நெஞ்சங்களில் ஆழப் பதிந்து நிற்கும் செயல்பாட்டை வெளிக்கொணர்ந்தே ஆக வேண்டும். 2003-ல் சச்சின் செஞ்சூரியனில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது அப்படியொரு இன்னிங்ஸ்தான். இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்ள வரை அந்த இன்னிங்ஸின் மகத்துவமும் பேசப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். 2015 உலகக்கோப்பையில் அடிலெய்டில் கோலி ஆடியதும் அப்படியொரு இன்னிங்ஸ்தான். ரோஹித் அப்படியொரு இன்னிங்ஸை 2019 உலகக்கோப்பையில் ஆடியிருந்தார்.
மான்செஸ்டரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 140 ரன்களை அடித்திருந்தார். அதுவும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ்தான். ஆனால், அப்போது இருந்த ரோஹித்தை விட இப்போதைய ரோஹித் ஒரு மேலான இடத்தில் இருக்கிறார். அணியின் சூப்பர் சீனியர். அணியின் கேப்டன். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து வேறு நடக்கிறது. அதிலும் முதல் முறையாக 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களுக்கு முன்னால் இந்திய அணி ஒரு உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுகிறது. இங்கே ஒரு மறக்கவே முடியாத இன்னிங்ஸை ஆடினால் எப்படியிருக்கும்? முந்தைய வரலாறுகளையெல்லாம் விஞ்சி நிற்கும் தோரணை அந்த இன்னிங்ஸிற்குக் கிடைக்கும். அதைத்தான் ரோஹித் அஹமதாபாத்தில் செய்திருக்கிறார். இந்தியாவிற்காக மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடியதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறப்பான வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கிறார் ரோஹித்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் 131 ரன்களை அடித்திருந்தார்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
அந்த இன்னிங்ஸை அப்படியே பாஸ் செய்து ரெஸ்யூம் ஆக்கியதைப் போலத்தான் இருந்தது பாகிஸ்தானுக்கு எதிரான இந்த இன்னிங்ஸ். ரோஹித் அடித்த ரன்களை விட அவரின் அணுகுமுறைதான் இங்கே அதிகம் பாராட்டப்பட வேண்டும். “முதல் இரண்டு போட்டிகளுக்கு எப்படி எங்களைத் தயார் செய்துகொண்டோமோ அப்படித்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கும் தயாராகி இருக்கிறோம். கூடுதலாக யோசித்து அழுத்தம் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை” என போட்டிக்கு முன்பாகப் பேசியிருந்தார்.ரோஹித்தின் வார்த்தைகளில் வெளிப்பட்ட நம்பிக்கை அவரின் பேட்டிலிருந்துமே அச்சு பிசகாமல் வெளிப்பட்டது. பழைய ரெக்கார்டுகளைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. பாகிஸ்தானின் பயமுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடும் நவீன ‘Fearless Cricket’-ஐ தான் ரோஹித் சர்மா இங்கே ஆடியிருந்தார்.
அதனால்தான், “5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு வந்து செல்பி எடுக்கிறேன்!” என ஒரு பத்திரிகையாளரிடம் கூறிவிட்டு வந்த ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் பந்திலேயே ரோஹித் சர்மாவால் ஸ்கொயரில் அப்படியொரு பவுண்டரி அடிக்க முடிந்தது.
இந்த பவுண்டரியையும் ரோஹித்தின் அச்சமின்மையையும் இந்தப் போட்டியோடு மட்டுமில்லை, இதற்கு முந்தைய சம்பவங்களுடனுமே ஒப்பிட்டுப் பேச வேண்டும். 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக மோதியிருந்தது. அந்தப் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டரை ஷாகின் அப்ரிடி காலி செய்திருந்தார். ஓப்பனரான ரோஹித்தும் அவரிடம்தான் வீழ்ந்திருந்தார். அந்தப் போட்டியை பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. ட்ரெண்ட் போல்ட் இருப்பதால் ரோஹித்தை ஓப்பனிங்கில் இறக்காமல் நம்பர் 3-ல் இறக்கியிருப்பார்கள். கோலியை நம்பர் 4-ல் இறக்கியிருப்பார்கள். ஷாகின் அப்ரிடி விதைத்த பயம் அது. அவரால்தான் ரோஹித்தும் கோலியும் பின்வாங்கினார்கள். இந்த இடத்திலிருந்துதான் ரோஹித் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியிருக்கும் துணிச்சலான இன்னிங்ஸைப் பார்க்க வேண்டும்.
192 ரன்கள்தான் டார்கெட். இதை நின்று நிதானமாக ஆடி 40 ஓவர்களை வரை கொண்டு சென்று வெல்ல முடியும். ஆனால், ரோஹித் அதற்கெல்லாம் விருப்பப்படவில்லை. எவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தை முடிக்க எண்ணினார். ஹசன் அலியின் ஓவர்களில் இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் என ஜோடி ஜோடியாகப் பந்தைப் பறக்கவிட்டார்.
முதல் 10 ஓவர்களில் 4 ஓவர்களை ஷாகின் அப்ரிடி வீசியிருந்தார். இந்த 4 ஓவர்களில் மட்டும் 33 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. ரோஹித் வேகமாக ஆட அவரின் உற்சாகம் அனைவருக்குமே தொற்றிக் கொண்டது. டெங்குக் காய்ச்சலிலிருந்து மீண்டு வந்த கில் கூட ஹசன் அலியின் ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்துவிட்டுதான் அவுட் ஆகியிருந்தார். கோலியும் ஷகின் அப்ரிடிக்கு எதிராக பவுண்டரிகளைச் சிதறடித்துதான் அவுட் ஆகியிருந்தார். விளைவு, 192 ரன்களை விரட்டிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 79 ரன்களை எட்டியிருந்தது. 36 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ரோஹித்தும் அரைசதத்தை எடுத்து அசத்தியிருந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளே வந்த உடனேயே ஹரீஸ் ராஃப் சராசரியாக 148 கி.மீ வேகத்தில் வீசி ஒரு ஓவர் முழுக்க அவரைத் திணறடித்திருப்பார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ஹரீஸ் ராஃப்புக்கு எதிராக ஒரு பவுண்டரி அடித்து நல்ல டச்சுக்கு வந்தார் ஸ்ரேயாஸ். நவாஸ், ஷதாப் என ஸ்பின்னர்கள் உள்ளே வர தன்னுடைய பாணியில் அசரவே அசராமல் கச்சிதமாக ஆடினார் ஸ்ரேயாஸ்.
தொடர்ச்சியாக அட்டாக் மோடிலியே ஆடிக்கொண்டிருந்தார் ரோஹித். ‘ஹிட்மேன்’ என்ற பெயருக்கு சாட்சியாக ரோஹித் சமீபத்தில் ஆடிக்கொடுத்த சிறப்பான இன்னிங்ஸாக இதை எடுத்துக் கொள்ளலாம். வேகமாக ரன்களை எடுத்தவர் செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கையில் 86 ரன்களில் ஷாகின் அப்ரிடியின் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார். ஆனாலும், ஒரு பிரச்னையுமில்லை. ஆட்டம் மொத்தமாக இந்தியாவின் கைக்கு வந்துவிட்டது. ரோஹித் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிக் கொடுத்துவிட்டுதான் பெவிலியனுக்குச் சென்றிருந்தார். ஸ்ரேயாஸூம் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து சிறப்பாக ஆடியிருந்தார்.
இந்தியாவும் ஓடிஐ உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்றதே இல்லை எனும் ரெக்கார்டை அப்படியே வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment