அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கக் கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடந்தது. இப்பேரணிக்கு சங்கத்தின் மாநில தலைவர் அ.எழுமலை தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.புகழேந்தி முன்னிலை வகித்தார்.
பேரணி தொடர்பாக அ.ஏழு மலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின்கீழ் செயல்படும் 29,418 பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருவதற்கு இதுவே முதன்மை காரணமாகும். எனவே 2013-ம் ஆண்டு முதல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டு இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இதற்கான மறு நியமன போட்டித் தேர்வை நீக்கிவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் நிரந்தர பணி வழங்கிட வேண்டும். அதேபோல ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்பு இருந்ததுபோலவே பணி பெறும் வயதை 45-ல் இருந்து 57-ஆக உயர்த்த வேண்டும்.
மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேரணி சிந்தாதிரிப்பேட்டை லாங்க்ஸ் கார்டனில் தொடங்கி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவுற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் கு.கிருஷ்ணன், பொருளாளர் சு.ராஜலட்சுமி, துணைத் தலைவர் க.பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment