சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி, கல்லூரி மாணவர்களை ஜப்பான் அழைத்து செல்ல திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




09/09/2023

சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி, கல்லூரி மாணவர்களை ஜப்பான் அழைத்து செல்ல திட்டம்

 1120311

ஜப்பான் அரசின் ‘சகுரா சயின்ஸ்’திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஜப்பான்அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கல்வி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஜப்பான் பயணம் செய்கின்றனர்.


இந்திய மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் 12 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய மாணவர்களை ஜப்பான் அரசு ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்கிறது. அங்கு ஜப்பான் நாட்டில் நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த ஆளுமைகளை மாணவர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து அறிவுசார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.


இந்நிலையில், ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்துஅறிந்துகொள்ள, தென்னிந்தியாவில் உள்ள தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆர்வமுள்ள பள்ளி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜப்பானுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.


இதற்கான ஏற்பாடுகள், முதல் உலக மூத்தக்குடி நிறுவனமும், கேசிசிஎஸ் இந்தோ - ஜப்பான் நிறுவனமும் இணைந்து செய்துள்ளன. முதல்கட்டமாக 10 கல்விநிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.


முதல் உலக மூத்தக்குடி நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கேசிசிஎஸ் இந்தோ ஜப்பான்நிறுவன நிறுவனரும், டோக்கியோதமிழ் சங்கத்தின் மூத்த மைய குழு உறுப்பினருமான கருணாநிதி காசிநாதன் முன்னிலை வகித்தார்.


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், ஜப்பான் நாட்டுக்கு செல்லும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், டீன்கள், முதல்வர்கள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கருணாநிதி காசிநாதன் பேசுகையில், ‘இந்தியா,ஜப்பானுக்கு இடையிலான கல்விவளம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை தொடர்பாக ஜப்பான் அரசை கல்வி நிறுவன நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.


மேலும், அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்துதான், ’சகுரா சயின்ஸ்’ திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற முடியும் என்பதால், அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு இந்த குழுவை அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பு நடைபெறும். பின்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.


ஜப்பான் செல்லும் கல்வி நிறுவன நிர்வாகிகள் குழு இந்தியா திரும்பிய பிறகு, அந்தந்த கல்விநிறுவனங்களில் படிக்கும், ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தலா 10 மாணவர்கள் என மொத்த100 பேர் ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459