எந்த ஒரு செயலையும் செய்ய இயலாது என்று யாரேனும் கூறினால், எங்களது ஆசிரியரால் கூட முடியாதா? என்று கேட்கின்ற குழந்தைகள் இன்றும் உண்டு. ஆனால், இன்றைக்கு ஆசிரியர்களை கல்வித்துறை நம்பவில்லை என்பது பேசுபொருளாகி வருகிறது.
லட்சக்கணக்கான குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் முறையைச் செயல்படுத்தச் சரியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டியது அவசியமே. இதற்காகவே பல அடுக்கில் அதிகார மட்டங்கள் காலங்காலமாக செயல்பட்டுவருகின்றன. கல்விக் கொள்கைகளை உருவாக்குதல், கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கம், கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகளுக்கான பயிற்சிகள் போன்றவை பெருநிர்வாகத்தின் மூலம் நிறைவேற்றப் படுகின்றன.
நெகிழ்வுத்தன்மை இல்லை! - இதன் வழிகாட்டுதல்களோடு சிறுநிர்வாகத்தினரான வட்டார அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் பள்ளி அளவில், உள்ளூர் சூழலுக்கேற்ப பின்பற்றுவது சாலச் சிறந்ததாக இருக்கும். இதில் நெகிழ்வுத் தன்மைக்கான இடம் மிகவும் அவசியம். அனைத்தும்மாநில அளவிலேயே திட்டமிட்டுவழிநடத்துவது அடுத்தடுத்த அளவில் உள்ள பணியாளர்களிடையே சோர்வினை ஏற்படுத்திக் குறைந்த அளவிலான பலனையே அளிக்கும்.
இந்நிலையில் தமிழக கல்வித்துறை அமல்படுத்தியிருக்கும் ‘எமிஸ்’ என் னும் மின்னணு செயலி நிர்வாக ரீதியாக நன்கு பலனளிக்கிறது. இருப்பினும் இதனால் ஏற்படும் பணிப்பளு குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்ததால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருப்பது ஆறுதலளிக்கிறது.
அதே நேரம், மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற செயல்பாடுகளும் எமிஸ் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மதிப்பீட்டு முறையைப் பொறுத்தவரை சுமையற்ற கற்றல், தேசிய கலைத்திட்ட வரைவு 2005போன்ற ஆவணங்களின் பரிந்துரையின்படி உண்டான தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடு (Continuos and Comprehensive Evaluation) முற்போக்கான அம்சங்கள் நிறைந்த ஒரு வழிமுறையாகும். இந்த திட்டம் 2011முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்ல பலனை அளித்துவந்தது.
இன்றும் அம்முறை கொள்கை ரீதியாகக் கைவிடப்படவில்லை. ஆனால் தற்போது தொடங்கப்பட்டுள்ள எமிஸ்செயலி மூலம் குழந்தைகளை மதிப்பிடும் உத்திகள் ஆசிரியர்களின் படைப்பாற்றலையும் சுதந்திரத்தையும் அறவே பாதிக்கிறது. இயந்திரகதியாக மதிப்பீடு செய்ய முனைகிறது. தனது வகுப்பறையில் தாம் நடத்திய பாடங்களில் குழந்தைகளின் புரிதல் எவ்வாறு உள்ளதுஎன்பதை உள்வாங்கி அவர்களுக்கான மதிப்பீடுகளை ஆசிரியரே மேற்கொள்வது கூடுதல் பலனளிக்கும்
பெற்றோரின் அதிருப்தி:
இதற்கு நேர்மாறாக ஆசிரியர்கள் எந்நேரமும் குழந்தைகளை எமிஸ் செயலியில் மதிப்பிடுவதைப் பார்க்கும் பெற்றோர் ஆசிரியர்கள் தமது சொந்த உபயோகத்திற்கு அறிதிறன் பேசியை பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கின்றனர். எல்லா வற்றுக்கும் மேலாக மாணவர்கள் மணிக்கணக்கில் பல்வேறு குறிப்பேடுகளில் எழுதுவதைத்தான் பெற்றோர் கல்வி என நம்புகின்றனர்.
இதனை விமரிசன பூர்வமாகப் பார்க்கும் அதே நேரத்தில் எழுத்துப் பயிற்சியால் விளையும் பலனையும் குறைத்து மதிப்பிடலாகாது. எமிஸ் செயலி மூலம் மதிப்பீடு செய்வது எழுத்துப் பயிற்சிக்கான நேரத்தை பெருமளவில் பாதிப்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் எமிஸ் செயலியின் மூலம் இயந்திரகதியில் அணுகுவது ஆசிரியர்களை நம்பாமல் இருப்பதன் வெளிப்பாடாகவும் பார்க்க இயலும்.இது ஆசிரியர்-மாணவர் இரு தரப்பினரின் படைப்பாற்றல் மேம்பாட்டுக் கும் உதவாது.
தமிழக கல்வித்துறை, இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம்,
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
வாசிப்பு இயக்கம் போன்ற பல முற்போக்கான கல்வி முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் வெற்றியின் பின்னணியில் ஆசிரியர்களின் உழைப்பு பெருமளவில் உள்ளது. அத்தகைய ஆசிரியர்களை நம்புவது அவசியம்.ஆசிரியர்கள் திறனைக் கூட்டி, அடுத்தடுத்த படிநிலை அலுவலர்கள் எமிஸ் செயலியை நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் அணுகுமுறையே நிரந்தர பலனளிக்கும். இதனை அரசு பரிசீலிக்கும் என்றே நம்புவோம். ஏனென்றால், எத்தனை திட்டங்களைக்கொண்டு வந்தாலும் அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களே.
- கட்டுரையாளர்:
பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment