அன்புள்ள ஜெ,
முகநூலில் கண்ட ஒரு பதிவு இது. எனக்கு ஏன் இந்தப்பதிவு முக்கியமென்றால் என் வாழ்க்கையில் இன்று நான் சிந்திப்பவை எல்லாவற்றுக்குமே தொடக்கம் பள்ளி, கல்லூரிகளில் எனக்கு தமிழ் கற்பித்தவர்கள்தான். நா.காமராசன் நடத்திய வகுப்புகள் இல்லாவிட்டால் நான் இல்லை. அறிவியல் பட்டம் எனக்கு உதவவில்லை. அது வெறும் லேபில்.நான் தொழில் செய்து உயர்ந்தது சுய அறிவால். அதற்கு உதவியவை தமிழ் வகுப்புகளில் பேசப்பட்ட கருத்துக்கள்தான். அவைகளைச் சார்ந்து நான் சிந்தித்ததும் மேற்கொண்டு வாசித்ததும்தான்.
ஆடலரசன் மாணிக்கம்
பள்ளிகளில் என்ன நடக்கிறது?
கிருஷ்ணமூர்த்தி
ஒரு தமிழாசிரியராக இன்றைய காலகட்டத்தில் பள்ளிகளில் சிறப்பான முறையில் ஒரு மாணவனை உருவாக்க முடிகிறதா என சுயபரிசோதனை கேள்வியை சில நாட்களாக தவிர்க்க முடியவில்லை
காரணம் அற்புதமான பாடத்திட்டங்கள் இருந்தும் மாணவர்களிடம் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர இயலவில்லை என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன் .
இதற்கான காரணத்தை யோசித்துக் கொண்டிருக்கையில் என்னைப் போலவே கல்லூரிகளில் இருக்கக்கூடிய தமிழ் துறை பேராசிரியர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களின் தரம் குறித்து வருத்தப்படுவதைக் காதுபடக் கேட்டிருக்கிறேன் ,
சமீபத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம் இதுகுறித்து முகநூலில் ஒரு வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
” பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?” என்று கேட்டிருந்தார்.மாணவர்கள் செய்தித்தாள் வாசிக்கவோ, அதனைப் பகிர்ந்து கொள்ளவோ இங்கே நேரமே இல்லை.சமூக விசயங்கள் பேசுவதை எதிர்பார்ப்பதெல்லாம் ரொம்ப அதிகம் வேண்டாம்.
உண்மை என்னவென்றால் இங்கே மொழிப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல்நிலை பிரிவில்(+1,+2) நான்கு பாடப்பிரிவுகள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
மற்ற பாடங்களுக்கு வாரத்திற்கு ஏழு பாடவேளைகள்.ஒரு பாடப்பிரிவிற்கு 45 நிமிடங்கள் மட்டுமே. அவற்றிற்குள்ளாகவே மாணவர்களைப் படிக்க வைத்து சிறு தேர்வுகள் வைத்துத் தயார்படுத்த வேண்டும்
மிகச் சிறப்பான நவீன இலக்கியங்களுடன் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு தன்னாட்சிக் கல்லூரி வடிவமைக்கக்கூடிய அளவிலான பாடத்திட்டத்தைத் தேர்ந்த பாடநூல் வல்லுநர்களைக் கொண்டு தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது.
தமிழ்ப் பாடத்தை பொறுத்தவரையில் சமகால நவீன இலக்கியங்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை பாடப் புத்தகங்கள் என்றாலே மு.வ.வை தாண்டி வரமாட்டார்கள்.
தற்போது நகுலன், பிரமிள், அழகிய பெரியவன் ,தமிழ் நதி, சி. மணி,வில்வரத்னம்,ஜலாலுதீன் ரூமி, இன்குலாப்,அப்துல் ரகுமான்,அய்யப்ப மாதவன், போன்றோருடைய கவிதைகளும்,சி சு செல்லப்பா ,அ முத்துலிங்கம், ஜெயமோகன் ,தோப்பில் முகமது மீரான், பிரபஞ்சன் ,பூமணி ,போன்றோருடைய அற்புதமான சிறுகதைகளும்,ஐராவதம் மகாதேவன் ஆர் பாலகிருஷ்ணன் ,பக்தவச்சல பாரதி, இறையன்பு ,மயிலை சீனி வேங்கடசாமி,அஜயன்பாலா,இந்திரன்,தி.சு.நடராசன் போன்ற ஆளுமைகளின் கட்டுரைகளும்,பழந்தமிழ் இலக்கியங்களும்,பக்தி இலக்கியங்களும் என மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.(அயோத்திதாசர்.ப.சிங்காரம் எல்லாம் சின்ன வகுப்புகளிலேயே வந்துவிட்டார்கள்)
ஆனால் இவற்றை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு 45 நிமிட பாடவேளை நான்கு மட்டுமே .எங்களின் மேலதிகாரிகள் 35 மதிப்பெண் எடுக்க வைப்பது மட்டுமே முதன்மைக் குறிக்கோளாக உத்தரவிடுகிறார்கள் .”சீக்கிரம் சிலபச முடிச்சுட்டு டெஸ்ட் வைங்க சார்” என்பது எங்களுக்கு பாலபாடம்.பாடத்திட்டத்தையே நடத்தி முடிக்க நேரமில்லாதபோது கூடுதலாக நடத்துவதற்கு இங்கு வேலையே கிடையாது.
(EMIS எமிஸ் என்ற ஒரு வஸ்து இருக்கிறது அதைப்பற்றி சொன்னால் தலை சுற்றும் வேண்டாம்)
இவ்வளவு பாடத்திட்டங்கள் இருக்கிறது ஒரு மாணவனை 35 மதிப்பெண் வாங்க வைப்பது மட்டுமே நோக்கம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.இதன் சிக்கலைச் சொன்னால் “”நாங்களா நடத்த வேண்டாமெனச் சொல்கிறோம் “என்பார்கள். எப்படி நடத்துவது?சொல்ல மாட்டார்கள்
இதனை ஒட்டி காலை நேர வகுப்பு, மாலை நேர வகுப்பு ,மதியம் உணவு இடைவேளையின் போது கூட வாசிப்பு,சனிக்கிழமை சிறப்பு வகுப்பு எனத் தொடர்ச்சியாக மாணவனை படிக்க வைத்தாலே வெற்றி பெற்று விடலாம் என்று அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இவற்றின் இடையே ஒரு ஆசிரியர் இவ்வளவு அற்புதமான பாடத்திட்டத்தை கொஞ்சம் கூட ரசனை மனோபாவம் இல்லாமல் இயந்திரத்தனமாக நோட்ஸ் கொடுக்கும் முறையிலேயே நடத்தக்கூடிய அவல சூழல் இருப்பதைத் தடுக்க முடியவில்லை.
100% தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு கெத்து இருக்கும்.போட்டிபோட்டு நோட்ஸ் கொடுத்து படிக்க வைப்பார்கள்.எனக்குத் தெரிந்து ஒரு கணித ஆசிரியர்(10ஆம் வகுப்பில்) பள்ளி திறந்த முதல்நாள் மாலை கடைசிபாடவேளை டெஸ்ட் பேப்பரை ஸ்டாப் ரூம்.டேபிளில் போட்டார்.ஜாமிண்ட்ரி,க்ராப் டெஸ்ட் வைத்திருந்தார்.எனக்கு ஆச்சரியம்,
“என்ன சார் முதல் நாளே டெஸ்டா” என்றேன்.
“ஆமாம் சார் ரிசல்ட்தானே கேக்குறாங்க” என்று அழகாகப்.பேபப்ரைத் திருத்தி ஒவ்வொரு ஆண்டும் செண்டம் கொடுக்கிறார்.
ஒரு சின்ன கேள்வி என்னன்னா,க்ராப் ,ஜாமின்றி கணக்குல எப்போ வரும்? கடைசி பகுதி,முதல்நாள் எப்டி டெஸ்ட் வச்சார்? 10 ஆம் வகுப்பு பையனுக்கு 9/ஆம் வகுப்புலயே நடத்திட்டார்.செண்டம் கொடுக்கிறார்.அவரைச் சொல்லி குற்றமில்லை.அரசு அதைத்தான் எதிர்பார்க்கிறது.
இதுகுறித்து எந்தக் கல்வியாளரும் தெரிந்துகொண்டு பேச வாய்ப்பு இல்லை.மாற்றுக்கல்வி என்று மேடைகளில் பேசும் எந்த எழுத்தாளர்களும் அரசு அதிகாரிகள் ஆசிரியர்களிடம் என்ன உத்தரவிடுகிறார்கள் என்று அறிந்துகொள்ளத் தயாரில்லை.
ஆசிரியர்களைக் குறை சொல்வதன் மூலம் தங்களை சமூக அக்கறையாளராக மட்டுமே காட்டிக்கொள்ள விழைகிறார்கள்.
உண்மையில் உயர்கல்வியில் அக்கறையோடு செயல்படும் பேராசிரியர்களாவது கல்லூரியில் இந்த நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொல்வதன் மூலம்,தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே ஆசிரியர்களிடம் எதிர்பார்க்காமல் கல்லூரிகளைப் போல பள்ளிகளிலும் ‘பாடம் நடத்துவதை மட்டுமே’ ஆசிரியர்களுக்கு முதன்மைப் பணியாக அறிவிக்க வேண்டும்.
அப்போதாவது அதிகாரிகளின் “35%” கொள்கையிலிருந்து விடுபட்டு இன்னும் சிரமேற்கொண்டு மாணவர்களை உருவாக்க ஆசிரியர் சமூகம் முற்படும்.
*
அன்புள்ள ஆடலரசன்,
இது தமிழகச் சூழல் மட்டும் அல்ல. இந்தியாவெங்கும் இதே சூழல்தான் என நினைக்கிறேன்.
அண்மையில் நான் எம்.டி.வாசுதேவன் நாயர் பற்றி ஒரு கட்டுரையை மாத்ருபூமி இதழில் எழுதியிருந்தேன். அக்கட்டுரையை கடைசி நாளில் சாலக்குடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது எழுதினேன். அதை புகைப்படமெடுத்து அனுப்பினேன். நான் மலையாளத்தில் தட்டச்சிடுவதில்லை. என் கையெழுத்து மோசம், ஆகவே அதை வாசித்து ஒலிப்பதிவையும் அனுப்பினேன்.
மாத்ருபூமி இணைய இதழில் அக்கட்டுரை வெளியானபோது அந்த ஒலிவடிவையும் பிரசுரித்திருந்தனர். அச்சுக்கட்டுரையை வாசித்தவர்களை விட பல மடங்குபேர் அந்த ஒலிவடிவை கேட்டிருந்தனர். அங்கும் வாசிப்பதை கடினமாக உணரும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டிருக்கிறது.
நவீன இலக்கியத்தின் விளைநிலமான வங்கத்திலும் அதுதான் நிலைமை.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
இளைய தலைமுறைக்கு வங்கமொழியில் சரளமாக வாசிக்க வராது என வங்கமொழி எழுத்தாளர் என்னிடம் கோழிக்கோடு டிசி புத்தகவிழாவில் சொன்னார். ஒரு பக்கம் வாசிக்க அரைமணிநேரம் ஆகும். அதேசமயம் ஆங்கில அறிவும் மிகக்குறைவு. நடைமுறை ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஆகவே வாசிப்பு கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. வாசிப்பவர்கள்கூட சேதன் பகத், அமிஷ் திரிபாதி வகையறா எழுதும் மிக எளிய ஆங்கில நூல்களை மட்டுமே வாசிக்கிறார்கள்தமிழகத்தில் யுடியூப் காணொளிகளில் கதைகேட்பவர்களில் நூறிலொருவர்கூட அக்கதைகளை வாசிப்பதில்லை – வாசிக்கக்கூடாதென்றில்லை, வாசிக்க தெரியாது. வாசிப்பு ஓடாது.ஏனென்றால் எந்த மொழியிலானாலும் சரளமாக வாசிக்கவேண்டும் என்றால் கண்ணால் பார்த்தே மொழியை நேரடியாக காட்சிகளாகவும், உணர்ச்சிகளாகவும் ஆக்கிக்கொள்ளும் பயிற்சி தேவை. மொழி மறைந்துவிடுமளவுக்கு மொழி பழகியிருக்கவேண்டும். இன்று இந்தியாவில் இளைய தலைமுறைக்கு தாய்மொழியில் தேர்ச்சி இல்லை. ஏனென்றால் நம் கல்வியில் தாய்மொழித்தேர்ச்சி கட்டாயமான ஒன்றல்ல, அது எங்கும் அளவுகோலாகக் கொள்ளப்படுவதில்லை. உயர்கல்வி நிலையங்களில் ஆங்கிலம் பயிலும் சிலர் மட்டுமே ஆங்கிலப் பயிற்சி உடையவர்கள். மற்றவர்களுக்கு மொழி என்பது தொழிலிலும் அன்றாடத்திலும் தேவைக்கு பயன்படுத்தும் தொடர்பூடகம் மட்டுமே. எந்த மொழியிலும் நூல்களை வாசிக்குமளவுக்கு பயிற்சி இல்லை.
அண்மையில் கே.சி.நாராயணன் சொன்னார். மலையாளத்தின் புகழ்பெற்ற பகடி எழுத்தாளர் வி.கே.என். சென்ற தலைமுறையில் பெரிதும் ரசிக்கப்பட்ட எழுத்தாளர். தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் தன் நூல்களில் ஒட்டுமொத்த காப்புரிமையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்றார். அப்போது அவரிடம் கே.சி.நாராயணன் அது அவசர முடிவு என்று சொன்னார். ஆனால் வி.கே.என் பதில் சொன்னார் “எனக்குத் தெரியும், என் எழுத்துக்களை அடுத்த தலைமுறையில் எவருமே படிக்கப்போவதில்லை. கிடைத்தவரை லாபம்”
உண்மைதான். வி.கே.என்னை இப்போது கேரளத்தில் புதிய தலைமுறையினர் படிப்பதே இல்லை. அவர் நூல்கள் மறு அச்சு வந்தே நீண்டநாட்களாகின்றன. அவற்றை வாங்கிய பதிப்பாளருக்கு நஷ்டம்தான். அவர் மறு அச்சுக்கு முனையவே இல்லை. ஏனென்றால் அவற்றை படிக்க மலையாள மொழி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். செவ்வியல் மொழி முதல் பேச்சுமொழி வரை மலையாளத்தின் எல்லா வண்ணங்களும் தெரிந்திருக்கவேண்டும். கேரளச் சாப்பாடு, கேரள இசை, கேரளக் கலாச்சாரம் ,மலையாள இலக்கிய மரபு எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் பகடியை புரிந்துகொண்டு சிரிக்கமுடியும்
ஆனால் இன்றைய மலையாள இளைஞர்களில் கணிசமானவர்களால் மலையாளத்தை கஷ்டப்பட்டு எழுத்துக்கூட்டித்தான் வாசிக்கமுடியும். வாசிப்பாவ்ர்களேகூட எளிமையான நேரடியான படைப்புகளையே படிக்க முடியும். அன்றாட அரசியலையும் காமத்தையும் மட்டுமே உள்வாங்க முடியும். பென்யாமின்,கே.ஆர்.மீரா, டி.டி.ராமகிருஷ்ணன்போன்று இன்று அங்கே புகழ்பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் எல்லாமே அத்தகைய எழுத்தை உருவாக்குபவர்கள்தான்.
தமிழிலும் இன்னும் சில ஆண்டுகளில் அந்நிலைமைதான் வரப்போகிறது. இப்போதே இலக்கியத்தில் லா.ச.ரா அல்லது வணிக எழுத்தில் சாண்டில்யனை எல்லாம் இளைய தலைமுறையினரால் வாசிக்க முடியவில்லை. கல்கி வாசிக்கப்படுவது அவருடைய மிக எளிமையான குழந்தைக்கதை போன்ற நடையால்தான். தமிழ்ப்பண்பாட்டின் நுட்பமும் அழகும் வெளிப்படும் படைப்பாளிகளை தமிழ் வாசகர்கள் புறக்கணிக்கும் காலம் அணுகிக்கொண்டிருக்கிறது.
நரசிம்மராவ் ஆட்சிக்காலம் முதல் இந்தியக் கல்வியை ‘பயனுறு கல்வி’ ஆக மாற்றும் முனைப்பு தொடங்கியது. உலகச்சந்தையில் நாம் மூளையுழைப்பை விற்க அது வழிவகுத்தது. நம் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து பொருளியல் மேம்பாடும் உருவானது. ஆனால் இன்று இலக்கியம், பண்பாடு, வரலாறு, தத்துவம் ஆகிய தளங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி உருவாகியுள்ளது. நான்காம்நிலை மாணவர்களே அந்த களங்களில் படிக்க வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினரால் அவர்களின் ஆய்வுக்களங்களிலேயே பத்துப் பக்கம் வாசிக்க முடியாது. இந்த வறுமையைத்தான் வரலாறும் சமூகவியலும் பேசும் யூடியூப் அறிவிலிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இது ஒரு இக்கட்டான சூழல். வெளியேறும் வழி என்ன என்பது கூட்டாக யோசிக்கவேண்டியது. முதலில் இப்பிரச்சினை உள்ளது என நம் அரசியலாளர்களை ஒப்புக்கொள்ள வைப்பதே பெரிய சிக்கல்.
ஜெயமோகன் பதிவு
TEACHERS NEWS |
No comments:
Post a Comment