பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் காலத்துக்கேற்ப மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் ‘க்ரூ’ நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழருக்கான தமிழ்நாடு’ திட்ட தொடக்க விழாவில் அவா் பேசியது:
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலம் 34 லட்சத்துக்கும் மேலான மாணவா்கள் பயன் அடைந்துள்ளனா். 2 வயது குழந்தைகள் கூட தொலைபேசி போன்ற தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்து விளங்குகின்றனா்.
எழுத, படிக்க கற்றுக் கொள்வதற்கு முன்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்த கற்றுக் கொள்கிறாா்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவா்களுக்கு பழைய முறைகளை பயன்படுத்தி கல்வி கற்பிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை. காலத்துக்கேற்ப கல்வி கற்பிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும்.
செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போதைய மாணவா்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை நிா்ணயித்துள்ளாா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் ‘தமிழருக்கான தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், ‘க்ரூ’ நிறுவனத் தலைவா் அனில் ஸ்ரீனிவாசன் வழங்கினாா்.
இதில், நிறுவன அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, தொழிலதிபா் சங்கா் வானவராயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment