பள்ளிக்கல்வி துறையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்ட தில், முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. மாவட்ட வாரியாக நியமன பட்டியலை, ஆய்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியர் பதவியில், 14,000 காலியிடங்கள் உள்ளன.
அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள நடப்பாண்டில், 109.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 12,000; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15,000; முதுநிலை ஆசிரியர்களுக்கு, 18,000 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியே மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வி துறைஅறிவுறுத்தியது.
முறைகேடு புகார்
ஆனால், சில உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாநில அளவில், சில குறிப்பிட்ட தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த நியமனங்களில், தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், மறைமுகமாக வசூல் வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு வலு சேர்ப்பது போல, துாத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
ஆதவா என்ற தனியார் நிறுவனம், பட்டதாரிகள் பலரிடம் பல லட்சம் ரூபாய் வரை மறைமுக நன்கொடை பெற்று, அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது.
அவ்வாறு நியமனம் பெற்றவர்களுக்கு, 4 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வரவில்லை என, மாவட்ட கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம், பள்ளிக்கல்வி துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை தேவை
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளிக்கல்வி துறையில், மத்திய அரசின் நிதியை செலவிடும் பிரிவான, ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவின் வழியே, தற்காலிக பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டத்துக்கு மட்டுமே, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேலாக ஒதுக்குகின்றன.
அந்த நிதியில் பெரும்பகுதி, தனியார் நிறுவனங்கள் வழியே செலவிடப்படுகிறது.
இந்த அடிப்படையில் தான், தன்னார்வ நிறுவனங்களின் வழியே, தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, பள்ளிக்கல்வி துறையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, உண்மையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரிந்துரைத்தது யார்?
இதற்கிடையே, அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் எப்படி நடந்தது; பரிந்துரைத்தது யார்; நிராகரிக்கப்பட்டவர்கள் யார் யார்; அதற்கான காரணம் என்னவென்ற விசாரணை துவங்கியுள்ளது.
இதன்முடிவில், பணி நியமனத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment