சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய செல்வகுமார் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், 2013 – 14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் இருந்த 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மனுதாரர் உள்ளிட்ட சிலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை பள்ளிகள் நடத்தப்படுகின்றன? அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன? அதில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜூலை 26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாநகராட்சி ஆணையர், கல்வித் துறை துணை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்
No comments:
Post a Comment