முன்பு நண்பர்கள் உறவினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைதளம் இப்போது மெய்நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளைக் கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற தளங்கள் இந்த செயல்களில் சிறந்து விளங்குகின்றன.
இப்படி தொழில்நுட்பம் வளர்ந்து வருவதற்கு ஏற்ப மோசடிகளும் அதற்கேற்றவாறு நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துத்தான் திருடினார்கள். இப்போது மொபைல் போன் மூலமாகவே எளிமையாகக் கொள்ளையடிக்கின்றனர். வங்கி கணக்கில் கைவைப்பதைத் தாண்டி தற்போது தனி மனித அடையாளங்களையும் திருடி வருகின்றனர்.
அந்த வகையில் டெலிகிராம் செயலியில் நடைபெற்று வரும் ஒரு நூதன மோசடி குறித்த ஒரு செய்தியை பார்ப்போம். அதாவது கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் பான் கார்டு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைக் கசிந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை டெலிகிராம் Botல் உள்ளிட்டால், பெயர், ஆதார் எண், தடுப்பூசி மையத்தின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் ஒரே இடத்தில் அடுத்த வினாடியே கிடைத்து விடுகிறது. இது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தடுப்பூசிகளைப் பதிவு செய்திருந்தால், அவர்களின் அனைத்து விவரங்களும் கிடைக்கிறது.
குறிப்பாகக் குடிமக்களின் பல தனிப்பட்ட விவரங்களும் தங்களிடம் இருப்பதாக டெலிகிராம் Bot கூறுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளது. இது இணையப் பாதுகாப்பில் அச்சுறுத்தல் என பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment