பள்ளி திறப்புக்கு முன்பே ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால் உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பி.ஜி., ஆசிரியர், நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை. இதுபோல் பல ஆண்டுகளுக்கு பின் பள்ளிக் கல்வியில் இருந்து மாநகராட்சி, பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளிகளுக்கு மாறுதல் (யூனிட்) கலந்தாய்வுக்காக துறைகள் வாரியாக தடையின்மை சான்று பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தாண்டு காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கான மாறுதல் கலந்தாய்வையும் இதுவரை கல்வித்துறை நடத்தவில்லை. இதனால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வித்துறையின் மெத்தன போக்கால் தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் தமிழில் 1058, ஆங்கிலம் 559, கணிதம் 416, அறிவியல் 1095, சமூக அறிவியல் 892 என 4020 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
இதன் மூலம் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் யூனிட் மாறுதல் கலந்தாய்வு நடத்த சம்பந்தப்பட்ட துறைகள் ஆசிரியர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்ட நிலையில் அதற்கான கலந்தாய்வையும் நடத்த கல்வித்துறை முன்வரவில்லை. இதை நடத்தினால் காத்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூலம் மொத்தமுள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையும் குறையும்.குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றும் வட மாவட்ட ஆசிரியர்கள் 11 ஆண்டுகளாக சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெறமுடியாமல் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து கிடக்கின்றனர்.
இதில் ஆசிரியைகள் எண்ணிக்கை அதிகம். இதுபோல் தென் மாவட்ட ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வட மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.பல்வேறு போராட்டங்களுக்கு பின் யூனிட் மாறுதலுக்கான தடையில்லா சான்று பெற்றும் கல்வித்துறை கலந்தாய்வு நடத்தாததால் மனஉளைச்சலில் உள்ளனர். ஆசிரியர்கள், மாணவர் நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்பவும், யூனிட் மாறுதல் கலந்தாய்வு நடத்தவும் இயக்குனர் அறிவொளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
TEACHERS NEWS |
No comments:
Post a Comment