தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான மாதாந்திர அலுவல் ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:
முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் முறையாக பதில் அளிப்பது இல்லை என்று பல ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். அதை சரிசெய்ய வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாவட்டஅளவிலேயே முதன்மை கல்வி அலுவலர்கள் தீர்க்க வேண்டும்.
உள்ளூர் பண்டிகைக்கு ஏற்ப, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்கள் பரிந்துரைத்தால், மாவட்ட கல்வி அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட - முதன்மை கல்வி அலுவலர்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். கோடை விடுமுறையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்.
தமிழ் மொழி திறனறிவு தேர்வில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடனே நிதியுதவி வழங்க வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இலவச கட்டாய கல்வி திட்டம்குறித்த பிரச்சினைகளுக்கு உடனேதீர்வு காண வேண்டும். மலைப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான போக்குவரத்து, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்குவழங்கப்படும் காலை சிற்றுண்டிதரமாக உள்ளதா என ஆய்வுசெய்வதோடு, பள்ளிகளில் தண்ணீர், கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் , மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் முடித்துவைக்க வேண்டும். மாதந்தோறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பள்ளிகளில் போதை விழிப்புணர்வு மன்றம் அமைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒருசில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆங்கில பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணிநியமன மனுக்களை தாமதமின்றி பரிசீலிக்க வேண்டும். பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிர்வாக பணியில் சிறந்து விளங்கிய பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment