5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் காத்திருப்புப் போராட்டம்! - TNPTF அறிவிப்பு!
பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என கொள்கைமுடிவு எடுத்திடவும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டைக் களைந்திடவும் வலியுறுத்தி ஜுலை 14 முதல் சென்னை அன்பழகனார் வளாகத்தில் நடத்திட TNPTF மாநிலச் செயற்குழுவில் முடிவு!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (19.05.2023) மதுரையில் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
மாநில செயற்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறியதாவது:
👉2022-23 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் இதுவரை நடைபெறவில்லை. கலந்தாய்வு அட்டவணையில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இடம் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் என்று கூறப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009-ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பெறும் ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. வேறு எந்தத் துறையிலும் இது போன்ற நிலை இல்லை. இதனால் ஆசிரியர்களுக்கு இருந்த மிகக் குறைந்த பதிவு உயர்வு வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு அவசியமில்லை என்பதை உறுதியான கொள்கை முடிவாக எடுத்து அறிவித்து நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து பதிவு உயர்வுக் கலந்தாய்வை விரைந்து நடத்திட வேண்டும்.
👉அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கையைக் காலதாமதமின்றி பெற்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவுள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனையை விரைந்து தீர்த்திட வேண்டும். குழு அமைத்தது என்பது பிரச்சனையைக் கிடப்பில் போட்டதாக ஆகிவிடக் கூடாது.
👉மேலும், காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
👉பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை முன்பு போல் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடமாக மாற்ற வேண்டும். தொடக்கக்கல்வித்துறை முன்பு போல் தனித்துவத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
👉தமிழ்நாடு அரசு 01.04.2023 முதல் அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 01.01.2023 முதல் வழங்க வேண்டும்.
👉பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வழங்கிட வேண்டும்.
👉ஆசிரியர்களின் உயர்கல்விக்கான பின்னேற்பு அனுமதி உடனடியாக அளிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறுவதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும்.
👉மாநில முழுவதும் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல்களை ரத்துச் செய்திட வேண்டும்.
👉தொடக்கக்கல்வி இயக்குநர் மட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களின் மீது உரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் வரும் ஜூலை 14 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம் நடத்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) உள்ள சங்கங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்தில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பொதுச்செயலாளர் ச.மயில் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல்!
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜூலை 14 முதல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!
மாநில செயற்குழு முடிவு!
TEACHERS NEWS |
No comments:
Post a Comment