ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`டெட்' தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு: அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வுநடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றுமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2013-ம்ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வெயிட்டேஜ் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறையிலான பணி நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அம்முறை கைவிடப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்படும் என்றும் அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வுநடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் பணிநியமனத்துக்காக மீண்டும் ஒருபோட்டித் தேர்வு நடத்தக் கூடாதுஎன்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சங்கத்தின் மாநிலதலைவர் கபிலன் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
தேர்தல் வாக்குறுதி: உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்த அரசாணை கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த அரசாணைக்கு எதிராக குரல் கொடுத்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்களில் பாதிபேர் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு எஞ்சியவர்களுக்கு மற்றொரு போட்டித் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்? 2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment