CBSE பாடத்திட்டம் அமலாவதால் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/05/2023

CBSE பாடத்திட்டம் அமலாவதால் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி

 சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாவதால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி தர கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரியில் 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பிற்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் விரிவாக்கப்படவில்லை. இதனால், 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் 6-ம் வகுப்பில் இருந்து தமிழக பாடத்திட்டத்தை படித்து வருகின்றனர்.


தற்போதைய அரசு, 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் புதியக் கல்விக்கொள்கை அமலாகவுள்ளது. ஆனால், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. இதனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுவை அரசு முடிவு செய்துள்ளது.


புதியக் கல்விக் கொள்கையை அமலாக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் முதல்கட்டமாக அமலாகிறது. வரும் கல்வியாண்டு முதல் தமிழகப் பாடத்திட்டத்துக்குப் பதிலாக புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6, 7, 8, 9, 11-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்நிலையில், புதுச்சேரியில் 4 பிராந்தியங்களிலும் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் தேர்ச்சி பட்டியலை தயாரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இச்சூழலில், புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி இன்று பிறப்பித்துள்ள உத்தரவில்: "புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனால் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி தரப்படும். அதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் 9ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி தர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459