'தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன்பே, 30.14 லட்சம் மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 7ம் தேதி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரி, ஐ.டி.ஐ.,களில் படிக்கும் மாணவர்களுக்கு, போக்குவரத்து கழகங்கள் சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுதும், 30.14 லட்சம் பேர் பயணம் செய்வர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும்,'ஸ்மார்ட் கார்டு' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை துவங்கி உள்ளோம்.
இதற்கான பணியை, ஐ.ஆர்.டி., எனப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டுஉள்ளது.
தற்போது வரையில் தமிழகம் முழுதும், 30.14 லட்சம் மாணவர்கள் பயணம் செய்வர் என, மதிப்பிட்டுள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் பாஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பே அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment