முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை இறுதியில் தொடங்குகிறது. கரோனா பெருந்தொற்றால் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி நிறைவடையாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளாமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4,200 இடங்கள் உட்பட 42,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப் பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
நாடு முழுவதும் 277 நகரங்களில்...: இந்நிலையில், 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆன்லைனில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 2.09 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். நீட் தேர்வு முடிவுகளை https://www.natboard.edu.in/, https://nbe.edu.in/ இணையதளங்களில் தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிட்டது.
அகில இந்திய ஒதுக்கீடு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி வருகிறது. அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்குமேலாகியும், இன்னும் அகிலஇந்திய கலந்தாய்வு தொடங்கவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பெருந்தொற்று காரணமாக எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி ஜூலை மாதம்தான் நிறைவடையவுள்ளது. அவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அவர்களின் பயிற்சி முடிந்தும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். அதன்பின்னர், தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும்” என்றனர்.
இதற்கிடையில், நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு ஆன்லைனில் பொது கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment