கோடை காலத்தில் சிறுநீா்ப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அதிலும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அவா்கள் கூறியுள்ளனா்.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச் சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவலாக மக்களிடையே காணப்படுகின்றன.
இந்த நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்தகைய பாதிப்புக்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளை நாடுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியது:
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெஃப்ரான்கள் (ரத்த நுண் சுத்திகரிப்பான்கள்) உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீா்ப் பையில் சேகரமாகின்றன.
அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப் பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும்போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.
இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடை காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
அண்மைக்காலமாக அத்தகைய பிரச்னைகளுடன் பலா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா்.
அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு லிட்டா் வரை தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம்.
தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும், கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம் என்றாா் அவா்.
No comments:
Post a Comment