அண்மைக்காலமாக அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளுள் ஒன்றாக நீர்நிலைகளில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூழ்கி இறக்கும் மரணச் செய்திகள் இருக்கின்றன. இது மிகுந்த வேதனைத் தரத்தக்கதாகும். குளத்தில், ஆற்றில், ஏரியில், கடலில் இதுபோன்ற துர்மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகிப் போய்விட்டது.
குறிப்பாக, நீண்ட அல்லது குறுகிய பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலங்களில், முன்பின் அறியாத நீர் நிலைகளில் இந்தத் துயரச் சம்பவம் அதிகமாக நிகழ்வதாக உள்ளது. அதேபோல், பெரும்பாலும் இது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு இறப்புகளாக இருப்பது எண்ணத்தக்கது. அதாவது, ஒருவருக்காக மற்றொருவர் எனக் காப்பாற்ற முனையும் முயற்சியில் தோல்வியுற்று தாமும் சேர்ந்து கூட மடிவதாகவே இது இருக்கிறது.
அறைக் குளியல் குறைக் குளியலாகி, வீட்டு வாசலில் ஒழுகும் குடிநீர் குழாயில் பிடித்து வைக்கப்பட்ட குண்டான் குளியல் காக்காக் குளியலாகிப் போனதன் விளைவு குளம் தவிர்த்ததும் நீச்சல் பழகாததும் ஆகும். கிராம மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு குளியல் என்பது அலாதியானது. தம் இயற்கை உடல் உபாதைகள் கழித்தல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து நிகழும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நீச்சல் நிரம்பிய ஆசுவாசக் குளியலும் கும்மாளமும் குதூகலமும் இடையிடையே நிகழும் உரையாடல்களும் கதையாடல்களும் தழும்பும் இடமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட நீர் நிலைகள் கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளன.
மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூ(சு)ழலில் மனிதர்களும் கால்நடைகளும் உறவாடிய நீர் நிலைகள் அனைத்தும் வணிக மயப்படுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக, குளங்களும் குட்டைகளும் பணம் கொழிக்கும் பலவகைப்பட்ட மீன்கள் வளர்க்கும் தீவனக் கழிவுகள் நிரம்பிய குட்டிக் கூவங்கள் ஆகிவிட்டன. இதில் வளர்ப்பு மீன்கள் விரைந்து வளரவும் பெருக்கவும் வளர்ப்புப் பிராய்லர் கோழிகளின் இறைச்சிக் கழிவுகளும் மறைமுகமாகக் கொட்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகைய நோக்கும் போக்கும் காரணமாக தமக்கு அண்மையில் அமைந்துள்ள ஆடிக் களிக்கும் ஒவ்வொரு மனத்திற்கும் மிக நெருக்கமான நீர் நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்ட நிலையில் ஆகிப்போனது காலக் கொடுமையாகும். அதற்கேற்ப, எந்திர மயமாகிப் போன வாழ்வியல் முறையில் வீடு தேடி வரும் குடிநீர் குழாயுடன் கால அருமை கருதி நீண்ட நெடிய இனிமை தரும் குளுமைக் குளியல் சுருங்கிப் போனது.
இதன் விளைவாக, நீச்சல் பழகுதல் மற்றும் உள் நீச்சல், வெளி நீச்சல், மிதவை நீச்சல் உள்ளிட்ட நீந்தி விளையாடுதல் ஆகியவை இருபதாம் நூற்றாண்டுக் குழவிகளிடம் காணாமல் போய் விட்டது. முதலில் வெறும் தரை நீச்சல், பிறகு குளக்கரை நீச்சல், அதன் பின்னர் தலையைத் தூக்கிக் கொண்டு தம்பட்ட நீச்சல், பின் மல்லாக்க மிதந்து கொண்டு பட்டாம்பூச்சிச் சிறகடிப்பு நீச்சல், கடைசியாக மூழ்கி மூச்சடக்கியபடி நீரைக் கிழித்து விரையும் உள் நீச்சல் பழக்குதல் மற்றும் பழகுதல் என்பவையெல்லாம் இவர்களுக்குக் கானல் போலாகி விட்டது.
இந்த நீச்சல் பழக்குதலில் பெரும்பாலும் பெற்றோர்களின் மெனக்கெடல் குறைவுதான். நீச்சல் நன்கு கற்றுத் தெளிந்த சக வயது தோழமைகளின், சகோதரத்துவங்களின் முன்னெடுப்புகள் தாம் அதிகம். எப்படியும் இவர்கள் புதிய நீச்சல் பழகுநர்களுக்குத் தாம் கற்றுக் கொண்ட அனைத்து வித வித்தைகளையும் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஒரு சேதமும் இல்லாமல் கற்பித்து விடுவது விந்தையானது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச் சமூகத்திற்குரிய இதுபோன்ற நீர் நிலைகளில் சாதி, மதம், இனம் மற்றும் ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் நீச்சல் கற்பதைப் பெருமையோடும் பெருமிதத்தோடும் வேண்டி விரும்புவது வியப்புக்குரியது. படிக்காதவர்கள் கூட அன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் இருப்பார்கள். நீச்சல் தெரியாதவர்கள் இருப்பது அபூர்வம். பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
குறிப்பாக, கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் நிறைந்த குடும்ப மன அழுத்தங்களை உடல் மற்றும் உடைமை அழுக்கோடு கரைக்கும் உரிய உகந்த இடமாக குளங்கள் இப்போதும் பெண்களுக்குத் திகழ்ந்து வருகின்றன. வீட்டில் அடக்கி ஒடுக்கப்படும் சின்னஞ்சிறு சிறுமிகள் பலர் தம் கண்கள் சிவக்க உடல் களைப்பு மேலோங்க நீச்சலடித்து வெகுநேரம் நீந்திக் குளிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்திருக்கும் போக்கு இன்றும் கிராமங்களில் காணக் கூடியதாக உள்ளது.
அதுபோல், வார விடுமுறை மற்றும் ஏனைய விடுமுறை காலங்களில் கிராமப்புற சிறுவர்கள் தம் பகல் பொழுதின் மற்றுமொரு பெரும் பகுதியை ஆசைதீர குளத்தில் கும்மாளமிட்டுக் கிடப்பதற்காகவே செலவிடுகின்றனர் என்பது மிகையாகாது. பல நேரங்களில் பெற்றோர்களிடம் திட்டும் உதையும் வாங்கி ஊறித் தொப்பலாக விரைத்து வெளியேறும் கூத்துகள் வேடிக்கை நிறைந்ததாகும்.
இதுபோன்ற திறந்தவெளிக் குளியல் கால நீச்சல் அனுபவங்கள் நகரமயமாதல் நோக்கி நகர்தல் மற்றும் ஆங்கில மோகக் கல்வி மீதான இடப் பெயர்வுகளில் அகப்பட்டுத் தவிக்கும் கிராமத்துக் குழந்தைகள் மற்றும் மத்திய தர வர்க்கத்தின் படித்த உயர்தட்டுப் பிள்ளைகளுக்குக் கிட்டியும் கிடைக்காத ஒன்றாக ஆகிவிட்டன. இவர்கள் வீடுகளுக்குள்ளேயே பொத்தி வளர்க்கப்படும் பொன்சாய் செடிகளாகப் போற்றி வளர்க்கப்படுவதும் ஒரு பொல்லாதக் காரணமாக உள்ளது. தம் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள ஏதேனும் புதியதொரு செயலி தம் திறன்பேசியில் வடிவமைக்கப்பட்டு உள்ளதா என்று கூகுள் கடையில் தேடியலையும் அவசரகதி மாந்தர்களாகப் பெற்றோர்கள் மாறிப் போனது வேதனைக்குரியது. ஒரு கொள்ளுப் பையின் பின்னால் ஓடும் பந்தயக் குதிரை போன்று இவர்கள் பொருளீட்டும் பொருட்டு காலத்தின் வாலைப் பிடித்து நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.
ஆளுக்கொரு கைப்பேசி; ஆளுக்கொரு வாழ்க்கை என்கிற தனிக் குடும்ப வாழ்வில் உழலும் தனித் தீவு உலகில் ஆனந்த வெட்டவெளிக் குளியலுக்கும் உடலுக்கு வலு சேர்க்கும் நீச்சலடித்து மகிழ்வதற்கும் ஏது நேரம்? விடாப்பிடியாகத் தம் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியைக் காசு கொடுத்தாவது கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்கிற நப்பாசையில் வார விடுமுறை நாள்களில் மெனக்கெட்டுக் கொஞ்ச நேரம் செலவழித்தாலும் விதி விடுவதாக இல்லை. பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்திலேயே யாரோ ஒருவரின் அசட்டை காரணமாக மூழ்கி மடியும் சோக வரலாறுகளும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.
நீச்சல் பழக்குதலில் வெறும் கற்றுக் கொள்ளுதல் மட்டும் நிகழ்வதில்லை. மனித உறவாடலும் உரையாடலும் மறைமுகமாக நிகழ்கின்றன. அதனாலேயே பழக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகள் ஆங்கே மிக அரிது. இங்கு அப்படியல்ல. காசுக்கு கலையும் வித்தையும் விற்கப்படும் போது அதில் எப்படி ஒட்டும் உறவும் ஒட்டிக் கொண்டிருக்க முடியும்? பல பெற்றோர்கள் அதற்கும் முனைவதில்லை.
தாமாகவே தானாகவே நீச்சலையும் கற்றுக் கொள்வார்கள் என்று தம் ஒப்பற்ற பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் தம் பெற்றோர்கள் நினைப்பது போல் எதையெதையோ எப்படியோ யார் யாரிடமோ கற்றுக் கொண்டு விடுகின்றனர். நீச்சல் மட்டும் கடைசிவரை அவர்களுக்குக் கைகூடுவதாக இல்லை. ஏனெனில், நீச்சலைக் கற்க மனிதராக இருந்தால் மட்டும் போதாது. தண்ணீரில் நாளும் நீந்தி வாழும் மீனாகக் கட்டாயம் மாறித்தான் ஆக வேண்டும். இதைப் பலரும் மறந்து விடுகின்றனர்.
தம் ஆறாம் அறிவைக் கொண்டும் தற்காலத்திய ஏழாம் அறிவாகத் திகழும் செயற்கை நுண்ணறிவுத் திறனைக் கொண்டும் சொடுக்குப் பொழுதில் குழுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நீச்சலை மிக எளிதாக உட்செரித்துக் கொள்ள முடியும் என்கிற மூளைக்குள் மொய்க்கும் தப்பெண்ணமே நீர் நிலை மரணத்திற்கு முழுமுதற் காரணமாக அமைந்து விடுகிறது. எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் முடி சூடிய வாகையர்களும் பயில்வான்களும் போதிய நீச்சல் பயிற்சியின்மைக் காரணமாக உயிர் நீப்பது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, ஒவ்வொரு மனிதரும் தம் பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர்கள் துணையுடன் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டியவை நீச்சலும் மிதிவண்டி ஓட்டுதலும் ஆகும். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் அவசியமற்றது. குறிப்பாக, இன்றைய நவீனப் பெற்றோர்கள் கர்ணக் கவசம் போல் பிள்ளைகள் மீது தூசு கூட பட விடாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டும் நிலையில் இவையிரண்டையும் கற்றுக் கொள்ளச் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது மிகவும் இன்றியமையாதது.
இல்லையேல், தம் அனைத்து வாழ்வும் மகிழ்வும் ஒருங்கே காணும் ஒளிமயமான தம் பிள்ளைகளின் எதிர்காலம் ஏதோவொரு துர்பொழுதில் இல்லாமல் மறைந்து விடக்கூடும். நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் ஒவ்வொரு பள்ளிப் பிள்ளைகளும் கல்லூரி மாணவர்களும் தம் இயலாமையை உணர்ந்து மிகுந்த பாதுகாப்புடன் அறிமுகம் அற்ற நீர் நிலைகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
ஆழம் தெரியாமல் காலை விடாதே எனும் மூத்தோர் வாக்கை இதுபோன்ற சமயங்களில் மதித்து நடப்பது இன்றியமையாதது. ஏனெனில், விலைமதிப்பற்றது நம் உயிர். வீணான அசட்டுத் துணிச்சலில் அதைப் பணயம் வைப்பது அறிவுடைய செயல் என்றும் ஆகாது. முடிவாக, நம் பிள்ளைகளுக்கு இந்த சமூகத்தில் நீந்திப் பிழைக்க எப்போது கற்றுத்தரப் போகிறோம்?
எழுத்தாளர் மணி கணேசன்
TEACHERS NEWS |
No comments:
Post a Comment