தமிழக அரசின் மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்களில் 8 பெண்கள் உட்பட 19 பேர் அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தலைமைச் செயலரும், பயிற்சி மையத் தலைவருமான வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடிமைப் பணிதேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு, தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு முழுநேரமாக 76 ஆர்வலர்கள் இந்தமையத்தில் பயிற்சி பெற்றனர். ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள், பேராசிரியர்கள், உளவியல் நிபுணர்கள் போன்ற வல்லுநர்களைக் கொண்டு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 46 ஆர்வலர்கள் முனைப்புடன் பங்கேற்றனர். தற்போது, டெல்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில், இப்பயிற்சி மைய ஆர்வலர்களில் 19 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment