கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரிக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலையே இருந்து வருகிறது" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வலியுறுத்தி 2017ல் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்காவிட்டாலும், அருகில் உள்ள பகுதி குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதில்லை. எனவே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
அப்போது அரசுத்தரப்பில் "விதிமீறல் இருந்தால் அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மே மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment