‘O’ வகை இரத்தமானது, உலகத்தில் மிகப் பரவலாகக் காணப்படுகிற ஒரு ரத்த வகையாகும். அதிலும் முக்கியமாக தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் “A” மற்றும் “B” ஆன்டிஜன் இல்லாமலும் ஆனால், “A” மற்றும் B ஆன்டிஜன் அமையப்பெற்றும் இருப்பது “O” ரத்தவகை. இந்த ரத்தவகை உள்ள மனிதர்கள், பிற ரத்த வகைகளான A, B ஆகிய அனைவருக்கும் ரத்ததானம் செய்யும் குணாதிசயத்தையும், வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.
“O”ரத்தவகையுடையவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்புண் (ulcer), தைராய்டு சுரப்பு நோய்கள் உள்ளவர்களாக இருக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையும், அவர்களின் உணவுப்பழக்கம், வாழ்விடம் மற்றும் பணி ஆகியவற்றை பொருத்ததாகும். இதற்கு சான்றளிப்பதுபோல், 1950 ம் ஆண்டு காலத்திலேயே, “O” ரத்த வகையினர் மற்ற ரத்த வகையினரைவிட இரண்டு மடங்கு அதிகமாக வயிற்றுப்புண் நோயினால் அவதிப்பட்டதாகக் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுடைய இரைப்பையில் அதிக அளவில் அமிலம் சுரப்பதேயாகும்.
“O”ரத்த வகையினருக்கு உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், புரதம் மற்றும் கொழுப்பு ஒருங்கே சேர்ந்துள்ள உணவுப்பொருட்களான முட்டை, மீன், பால், எண்ணெய் வித்துக்கள் எளிதாக செரிமானமாகிவிடுகிறது. கொழுப்பு மற்றும் புரதம் இரண்டையும் எளிதாகச் செரிக்க வைக்கக்கூடிய குடலின் அல்கலைன் பாஸ்படேஸ் (alkaline phosphatase) மற்றும் அப்போ B 48 (apoB48) என்னும் கொழுப்புப் புரதம் ஆகியவை அதிக அளவில் செரிமானத்திற்காக சுரப்பதேயாகும். அதுமட்டுமில்லாமல், செரிமான மண்டலத்தை சீராக வைக்கவும், போதுமான அளவு கால்சியத்தை உட்கிரகிக்கும் தன்மையும் இவர்களுக்கு இயற்கையில் அமையப்பெற்றுள்ளது.
“O” ரத்த வகையினருக்கு ஏற்ற உணவுப்பொருட்கள்
தானியங்களில், “Gluten” எனப்படும் புரதப்பொருள் அதிகமாக இருக்கும் கோதுமை, சோளம், ஓட்ஸ் போன்றவற்றை தவிர்த்து, கம்பு, கேழ்வரகு, சிறுதானியங்கள், அரிசி போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இவர்களின் ரத்தம் உறைதல் தன்மை சற்று குறைவாக இருக்குமென்பதால், வைட்டமின் “K” அதிகமுள்ள கீரைகள், சின்ன வெங்காயம், பச்சைப்பட்டாணி, ஆட்டு ஈரல் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
பழவகைகளைப் பொருத்தவரை, அனைத்து பழங்களும் இவர்களுக்கு போதுமான உயிர்சத்துக்களையும், ஆன்டிஆக்ஸிடன்டையும் அளித்தாலும், குறிப்பாக அத்திப்பழம், கொய்யாப்பழம், திராட்சை, பெர்ரி வகை பழங்கள் இவர்களுக்கு ஏற்றதாகும். பால் சார்ந்த உணவுகளில், தயிரும் மோரும் இவர்களுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாமையைக் கொடுப்பதில்லை. அதே சமயத்தில், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி போன்ற பால் சார்ந்த பொருட்கள் சில நேரங்களில் செரிமானச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
இயற்கையாகவே, தைராய்டு சுரப்பு சற்று குறைவாக இருக்கும். “O” ரத்த வகையினர்,
அதிக உடல் எடையுடன் இருப்பின், உடல் எடை குறைப்பிற்கான செயல்கள் சற்று குறைவான முடிவுகளையே தரும். அதனால், தைராய்டு சுரப்பை மேலும் குறைக்கும் கடுகு, முட்டைக்கோசு, காலிஃபிளவர் போன்ற உணவுகளைத் தவிர்த்து, தைராய்டு சுரப்பை அதிகரிக்கும் நண்டு, மீன், இறால் போன்ற கடலுணவுகளையும், ஐயோடின் சத்து அதிகமுள்ள உணவுகளையும் உண்ணலாம்.“O”ரத்த வகையினருக்கு ஏற்படும் செரிமானக் குறைபாடுகள்
பல்வேறு நன்மைகள் “O” ரத்த வகையினருக்கு இருந்தாலும், ஒரு சில செரிமானம் தொடர்பான சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. கார்போஹைடிரேட் உணவுப்பொருட்களான தானியங்கள், கிழங்கு வகைகள் உணவில் சற்றே அதிகரிக்கும்போது, அவை செரித்தபின் எளிதில் கொழுப்பாக மாற்றப்படுகிறது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் லெக்டின் புரதமானது இவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தேவையற்ற அழற்சி மற்றும் எதிர்ப்புச் சக்தி சார்ந்த தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
“O”ரத்தவகை ஆதிகாலத்திலேயே தோன்றிய ரத்தவகை என்பதால், இவர்கள் மாமிசம் உண்பவராக இருந்தாலும் எந்த சிக்கலும் இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே இவர்கள் அதிக புரதமும், குறைவான கொழுப்பும் உள்ள உணவுப்பொருட்களை தயக்கமின்றி உண்ணலாம். இந்த பழங்கற்கால உணவு முறையே தற்போது “Paleo diet” என்று மீண்டும் அறிமுகமாகி உடல் எடை குறைப்பதற்குப் பின்பற்றப்படுகிறது. இதிலும் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், கற்கால மனிதர்கள், இடம்விட்டு இடம் பெயரும் நாடோடிகளாகவும், வேட்டையாடுபவர்களாகவும், மொத்தத்தில் அதிக உடலுழைப்பை கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
அதனால் அவர்களின் உடலிலும், தசைகளிலும் சேமிக்கப்பட்ட புரதமானது எளிதில் ஆற்றலாக செலவிடப்பட்டது. ஆனால், தற்போதுள்ள குறைவான உடலுழைப்பும், மிதமான பணிச்சூழலும் இருக்கும் நிலையில், குறிப்பாக “O” ரத்தவகை இதுபோன்ற “Paleo” வகை உணவுமுறையைப் பின்பற்றுவதால், சில நேரங்களில் புரத மூலங்களின் வினைகளால், சிறுநீரகத்தின் வேலைப்பளு அதிகரித்து Urea, Urice acid போன்ற கழிவுப்பொருட்கள் ரத்தத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தற்போதைய வாழ்க்கை முறைக்கேற்ப அளவான புரதம், கார்போஹைட்ரேட், பரிந்துரைக்கப்பட்ட அளவு காய்கள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சரிவிகித உணவே “O” ரத்த வகையினருக்கு என்றும் நன்மையளிக்கும்.
ஒவ்வொரு ரத்த வகையினருக்கும் ஒரு விதமான உணவுப்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அவர்கள் அதைத் தவிர்த்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இருந்தாலும், அனைத்து வகையான உணவுகளையும் ஒருவர் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகரிக்கப்பெற்று அந்த ஒவ்வாமையின் தாக்கமும் குறைக்கப்படுகிறது. குறிப்பாக, “O”ரத்த வகையினர், பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை தவிர்ப்பதால், உயிர்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக நியூயார்க் நகரிலுள்ள NYU Langone Medical Center அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி குங்குமம் டாக்டர்
No comments:
Post a Comment