இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப். 15ம் தேதி தொடங்க வேண்டும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதனால், இன்ஜினியரிங் கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே தொடங்கும் என தெரிகிறது. தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று தாங்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்வர். 12ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியான பின் கலந்தாய்வு பணிகள் தொடங்கும். வழக்கமாக ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமானது. கடந்த ஆண்டு நவ. 13ம் தேதி வரை இன்ஜினியரிங் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதை, இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் செப்டம்பர் 15ம் தேதி என நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வரும் கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இணைப்பு வழங்க ஜூலை 31ம் தேதி கடைசி நாள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்கைக்கான கடைசி நாள் மற்றும் வகுப்புகள் தொடங்கும் நாள் செப்டம்பர் 15ம் தேதி, இது 2ம் ஆண்டிற்கான லேட்டரல் நுழைவு சேர்க்கைக்கான கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் கல்வி ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதல் நிலை இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் இடங்கள் காலியாக இருக்கிறது. காரணம், மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேராமல் வேறு கலை அறிவியல் அல்லது மற்ற படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர். எனவே, காலி இடங்களை உடனக்குடன் அறிவித்தால் இந்த நிலையை தவிக்க முடியும். எனவே, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணத்தை ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாத இடங்களை காலியாக கருதி அவற்றை ஒரே சுற்றில் மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கலந்தாய்வு தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் அதிக இடங்கள் காலி ஏற்பட கூடும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் காலி இடங்களை தவிர்க்க 10 சதவீதம் கூடுதலான இடங்களை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து பேசிய கல்வியாளர்கள் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் முன் எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடத்துவது கடினம். தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் இருந்த போதிலும் எம்பிபிஎஸ் இடங்களை பெற்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறுவார்கள். இதனால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அதிக காலி இடங்கள் உருவாகும். ஜூலை மாதத்திற்கு முன்னதாக எம்பிபிஎஸ் நீட் தேர்வு முடிவு வெளியாகாது. எனினும் சிலர் 2 படிப்புக்கும் விண்ணப்பித்து இருப்பார்கள். சில மாணவர்கள் மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும் போது எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்து விடுவதால் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இதனால் 10 % இடங்களை கூடுதலாக அண்ணா பல்கலைக்கழகம் ஏஐசிடிஇயிடம் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment