தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி வெளியிட்ட அறிக்கை: பெருந்தொற்று கால பாடச்சுமையை குறைக்கிறோம் என்ற பெயரில் 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள டார்வினின் உயிரியல் பரிணாம வளர்ச்சி கோட்பாடு எனும் பகுதியை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் குழுமம் (என்சிஇஆர்டி) நீக்கியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுபரவல்கூட டார்வின் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும். எனவே, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை அறிந்து கொள்ள இதுவே சரியான காலகட்டமாகும்.
அதற்கு மாறாக, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது கண்டிக்கத்தக்கது. இது அறிவியல் மனப்பான்மையை மட்டுப்படுத்தி, உயர்கல்வியின் தரத்தை பெரிதும் பாதிக்கும். ஏனெனில், பரிணாம வளர்ச்சி கோட்பாடு அனைத்து உயிரியல் பாடங்களுக்கும் அடிப்படையாகும். இவற்றை நீக்கியதால் உயிரியல் ஆய்வுகள் பற்றிய சிந்தனைகள் மாணவர்களுக்கு எழுவதற்கு தடையாக மாறிவிடும்.
இனிவரும் காலங்களில் நாம்எதிர்கொள்ளப் போகும் பருவநிலை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் பயன்பாடு, அதனால் ஏற்படும் விளைவுகள் என பல்வேறு தேவைகளுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பயன்படும்.
மேலும், பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிவியல் பூர்வமானது என்பதற்கு பலவிதமான சான்றுகள் கிடைத்து வருகின்றன. எனவே, பரிணாம வளர்ச்சிகோட்பாடு மற்றும் அதையொட்டிய பகுதிகள் நீக்கத்தை என்சிஇஆர்டி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment