தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.
வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசமும் முடிவுற்ற நிலையில், கேமரா, சென்சார் போன்றவை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இதனை பின்பற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையை மே 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment