பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக புதுவையில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத்தொடங்கியுள்ளன.
இது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பத்தாம் வகுப்பில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்ட தனியார் பள்ளிகளில் சில தங்களிடம் சுமாராக படிக்கும் மாணவர்களை தனிப் பிரிவாக்குகின்றனர்.
தொடர்ந்து அவர்களின் பெற்றோரை அழைத்து பேசுகின்றனர். அதே பள்ளியில் படிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினால், தனித்தேர்வர்களாக எழுத ஒப்புதல் வாங்குகின்றனர். இதற்கு பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை கல்வித்துறை எச்சரித்தது. இடையில் கரோனா காலத்தில் இப்புகார்கள் எழவில்லை. மீண்டும் தற்போது இப்பிரச்சினை எழத்தொடங்கியுள்ளது. கல்வித் துறை இதை கவனிக்கவேண்டும்" என்றனர்.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், "பள்ளிக்கு எங்களை அழைத்து உங்கள் குழந்தை சுமாராக படிக்கிறார். அதனால் 9-ம் வகுப்பு மீண்டும் படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்தால் தனித் தேர்வராகதான் எழுதவேண்டும். அதை வரும் வாரத்துக்குள் தெரிவியுங்கள் என்றுசொல்கின்றனர். என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றனர்.
கல்வித்துறை தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, "இதுதொடர்பாக புகார்கள் வந்தால் உடன் நடவ டிக்கை எடுக்கப்படும்" என்றனர். கல்வியாளர்களோ, "கல்வித்துறை இவ்விஷயத்தில் தாமாகவே முன்வந்து உத்தரவு பிறப்பிப்பது அவசியம். இது மாணவர்களின் மனநலனை பாதிக்கும்" என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment